கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் மாரம்மா கோவில் உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், வழக்கத்தைவிட கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்தனர். மேலும், பலரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உடன் இருந்தவர்கள், சுமார் 40 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், முதற்கட்டமாக 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. பிரசாதம் சாப்பிட்ட சுமார் 60 காகங்களும் கோவில் அருகில் இறந்துக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்கும் எனவும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.