பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரமாக காண்பிக்க முடியாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சகம், பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில் பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி - கல்லுாரி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுத்தால் போதும். அதே போல், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரமாக காண்பிக்க முடியாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. பெயர், முகவரி, பெற்றோர் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட கடைசிப்பக்கம் இனி அச்சிடப்படாது.
இனிமேல் அச்சிடப்படும் பாஸ்போர்ட்டுகளில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலாவதியாகாத பாஸ்போர்டுகளில் கடைசிப் பக்கத்தில் உள்ள முகவரியை ஆதாரமாக காண்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது