நாட்டில் ஓடும் ரயில்களின் அவலத்தை பா.ஜ.க. மாஜி பெண் அமைச்சர் வீடியோவாக வெளியிட்டுள்ளது வைரலாகி பரபரப்பாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க.வின் லட்சுமிகாந்த் சாவ்லா. அம்மாநிலத்தில் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர்.
சமீபத்தில் அமிர்தசரசில் இருந்து சரயு யமுனா ரயிலில் பயணம் செய்த போது 10 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் தாமதமாக சென்றது. இதனால் அவரும்,பயணிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனை ரயிலில் அமர்ந்தபடியே வீடியோவில் பேசி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் காட்சி வெளியாகி உள்ளது. புல்லட் ரயில் .... பறக்கும் ரயில் .... 120, 200 கி.மீ வேகத்தில் ரயில் விடப் போகிறோம் என்பதெல்லாம் வேண்டாம்.
ஓடும் ரயில்களை நேரத்திற்கு ஒட்டுங்கள். குறிப்பிட்ட நேரத்தை தாண்டி 10 மணி நேரத்திற்கும் மேலாக போதிய உணவு, குடிநீரின்றி அவதிப்படுகிறோம். ரயிலும் ஓட்டை, உடைசலாக உள்ளது.
ஜன்னல் கதவுகள் உடைந்தும், தண்ணீர் குழாயை திருகினால் கையோடு வருகிறது. கழிப்பறையில் உட்கார முடியவில்லை. தாமதம் குறித்தும் உரிய விளக்கம் இல்லை.
உணவு, குடிநீரும் இன்றி தவிக்கிறோம். முதலில் இப்போது உள்ள ரயில்களை உரிய பராமரிப்புடனும் நேரத்திற்கும் ஓட்ட நடவடிக்கை எடுங்கள். புல்லட் ரயில், பறக்கும் ரயில், 200 கி.மீ வேகத்தில் ரயில் விடப் போகிறோம் என்று கூறுவதை மறந்து விடுங்கள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
உண்மை நிலையை அப்பட்டமாக விளக்கும் இந்த வீடியோ வைர லாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.