டெல்லியில் குடியரசு தின விழாவில் கேரள அரசு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் மோதல் வெடித்துள்ளது.
ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் சார்பில் கலை, கலாச்சாரத்தை பறைசாட்டும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெறுவது வழக்கம். கேரள அரசின் சார்பில் 1924-ம் ஆண்டில் வைக்கத்தில் நடந்த ஆலய நுழைவு சத்தியாக்கிரகப் போராட்டத்தை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி இடம்பெறுவதாக இருந்தது.
முதற்கட்டமாக முதலில் இதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பில் இடம்பெறும் ஊர்திகளின் இறுதிப் பட்டியலை முடிவு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு கேரள அரசு தரப்புக்கு அழைப்பு இல்லை. மேலும் கேரள அரசின் அலங்கார ஊர்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கேரள அரசுக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல் ஏதும் வரவில்லை என கேரள அரசும் மறுத்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அரசியல் பழி தீர்க்கும் வகையில் மத்திய அரசு கேரள அரசின் அலங்கார ஊர்திக்கு தடை விதித்துள்ளதாக சர்ச்சையும், இதனால் மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் சபரிமலையை தேசிய ஆன்மீக தலமாக சித்தரித்து கேரள அரசு தயார் செய்திருந்த அலங்கார ஊர்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.