சபரிமலை கோயிலில் 18 படிகள் ஏறி ஐயப்பனை இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் தரிசித்ததாக வெளியான தகவல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே உண்மை தான் என தெரிய வந்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கேரள கம்யூனிஸ்ட் அரசு முனைப்பு காட்டி வருகிறது. பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கடந்த 2-ந் தேதி அதிகாலை கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை வழிபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்துத்வ அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இத்தனை களேபாரங்களுக்கு இடையே நேற்று இரவு நடை சாத்துவதற்கு சிறிது நேரம் முன்பு 10.45 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்ற 46 வயது தமிழ்ப்பெண் 18 படி வழியாகச் சென்று ஐயப்பனை தரிசித்ததாக இன்று காலை முதலே தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. சசிகலா படியேறினாரா? இல்லையா? என்ற கேள்விக்கு ஆமா... இல்லை ... என குழம்பமான பதில்களே கிடைத்தன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட சசிகலாவை பம்பையில் கண்டுபிடித்த செய்தியாளர்கள் மடக்கி 18 படியேறியது உண்மையா? என கேட்டனர். அவரோ, போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் வரை சென்றேன். அதன் பிறகு கோயில் பணியாளர்கள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எனக்கு மாதவிடாய் காலம் முடிந்து விட்டதற்கான மருத்துவ சான்றிதழை காட்டியும் விடவில்லை. 45 நாட்கள் விரதம் இருந்து இரு முடிகட்டி வந்த என்னை அனுமதிக்காதது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் சசிகலா 18 படியேறியது உண்மை தான் என்றும், பாதுகாப்பு கருதியே போலீசாரே அவரை பொய் சொல்ல வைத்ததாகவும் இப்போது சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சன்னிதானம் பகுதியில் நேற்று இரவு 10.45 மணிக்கு சசிகலா இருமுடிக்கட்டுடன் இருப்பது பதிவாகி வெளியிடப்பட்டுள்ளது. சசிகலா பாதுகாப்பான இடத்தை அடைந்தவுடன் போலீசாரே சி.சி.டி.வி பதிவுகளை வெளியிட்டும் உறுதி செய்துள்ளனர்.
இதனால் ஐயப்பன் கோயிலில் 18 படியேறிய 10 முதல் 50 வயதுக்குட்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் சசிகலா . இலங்கையின் காரைத்தீவு பகுதியைச் சேர்ந்த சசிகலா தற்போது பிரான்சில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.