சென்னை: தீபாவின் கார் ஓட்டுனரும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட ராஜாவை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). இவர், திநகரில் உள்ள ஒரு கடையில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் நேற்று வாடிக்கையாளர் வீட்டுக்கு ஏசியை ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது உரசிவிட்டார்.
இதனால் சம்பந்தப்பட்ட கார் உரிமையாரளருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ரமேஷ்குமாரை தாக்கிய உரிமையாளர் அவரது செல்போன் மற்றும் ஆட்டோவில் இருந்த ஏசி ஆகியவற்றை கைப்பற்றி மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் ஜெ.தீபாவிடம் கார் ஓட்டுனராக இருந்த ராஜா என்பது தெரியவந்தது. இதன்பிறகு, ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஜெ.தீபா தகவல் அறிந்ததை அடுத்து, மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து ராஜாவை விடுவிக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் எச்சரித்ததும் பின்னர் தீபா திரும்பி சென்றுவிட்டார்.
கட்சிப் பேரவையில் இருந்து ராஜாவை கடந்த வாரம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.