கஞ்சா விற்பனை செய்தி வெளியிட்ட டிவி நிருபர் வெட்டிக்கொலை

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் ( 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தார். இதனால் அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த சிலர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு ஓடிவிட்டனர் இதில் மோசஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷ், மனோஜ், ஆதி, ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரியான நவமணி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் படுகொலைக்குப் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.செய்தி வெளியிட்டதற்காகப் படுகொலை என்றால், தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்ற அவலத்தை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமுக விரோதக் கும்பல்கள், மணல் , நீர்நிலை ஆக்கிரமிப்பு, கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பவர்கள் , சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன. இந்த சமுக விரோதக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். முதல்வர் நேரடியாக இதில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பத்திரிகையாளர்கள்.
மோசஸ் குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

READ MORE ABOUT :

/body>