சென்னையில் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

by எஸ். எம். கணபதி, Oct 17, 2019, 14:54 PM IST

சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு தொடங்கிய கனமழை இன்று அதிகாலை வரை நீடித்தது. அதற்கு பிறகு மழை குறைந்து விட்டாலும் தூறல் நின்றபாடில்லை. அதே போல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நேற்்றிரவு முதல்் காலை வரை கனமழை பெய்திருக்கிறது. சென்னையில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமடைந்து காணப்படுகின்றன. அதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நடந்து செல்பவர்களின் நிலை இன்னும் மோசம். தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, நடந்து செல்பவர்களின் மீது சேற்றை அடித்து விட்டு செல்கின்றன.

இந்நிலையில், சென்னையில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் இன்னும் 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழையும், சென்னை மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ. மழையும், கன்னியாகுமரி, கொடைக்கானில் 13 செ.மீ. மழையும், திருவாரூரில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.

Get your business listed on our directory >>அதிகம் படித்தவை