நடிகர் தனுஷ் தனது பட்டாஸ் படத்துக்குப் பிறகு ஜெகமே தந்திரம் படத்தை வெளியிடவிருந்தார். கடந்த மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர் பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்ததால் ஜெகமே தந்திரம் படம் ஒடிடி தளத்தில் வெளிவரும் என்று பேசப்பட்டது. அதற்குப் பட நிறுவனம் மறுப்பு தெரிவித்து வந்தது.
ஜெகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் வெளிடப்பட்டது. அது இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு படம் பற்றி அப்டேட் எதுவும் இல்லாத நிலையில் பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடமும், தனுஷிடமும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். இதற்கிடையில் தனுஷ் அட்ராங்கி ரே இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கச் சென்றார்.
கொரோனா ஊரடங்கு தளர்வில் கடந்த அக்டோபர் 15ம் தேதியே தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்கப்படாமலிருந்தது. இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்து தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர்கள், மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு தியேட்டர்களை 10ம் தேதி முதல் திறக்கலாம். 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வழிகாட்டுதல் முறைகள் தரப்பட்டது. அதை ஏற்று 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க ஏற்பாடு நடக்கிறது. டிக்கெட் முன்பதிவும் தொடங்கி விட்டது.
வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க மருந்து தெளிக்கும் பணிகளும் நடந்துள்ளது.
புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் புதிய படங்களை விபிஎப் கட்டணம் ரத்து செய்தால் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர். ஆனாலும் தீபாவளி வெளியீடாக சில படங்கள் வெளி வரும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூம் படங்களை வெளியிட வலியுறுத்தி உள்ளார்.தனுஷின் ஜெகமே தந்திரம் தீபாவளிக்கு வெளிவருமா? படத்தின் அப்டேட் என்ன? என்று ரசிகர்கள் கேட்டுவரும் கேள்விகளுக்கு இன்று பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
வரும் 13ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஜ்ஜி வீடியோ பாடல் வெளியாகிறது எனத் தெரிவித்திருக்கிறார். பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.இது ஒருவகையில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும் படம் ரிலீஸ் ஆகாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதற்கும் ஒரு அப்டேட்டை இயக்குனர் சீக்கிரம் வெளியிடுவார் என்கிறது படக் குழு.