பள்ளிகளில் ஆண்டு தேர்வு காலம் தொடங்கி விட்டது. மார்ச் 1ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கும் மார்ச் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவருக்கு அரசு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. தேர்வு காலம் வந்துவிட்டாலே மாணவ மாணவியரையும், பெற்றோரையும் பயம், பதற்றம் பிடித்துக் கொள்ளும்.
"தலை சுத்துறது மாதிரி இருக்கு..."
"வயிறு ஒரே குமட்டல்... வாந்தி வர்றதுபோல இருக்கு"
"எக்ஸாம் எழுத முடியுமா என்னென்னே தெரியலை... கையெல்லாம் நடுங்குது.."
"ராத்திரி பகலா முழிச்சிருந்து படிச்சேன்... எல்லாமே மறந்திட்டதுபோல இருக்கு.."
என்ற சொல்லாடல்களை ஒவ்வொரு வீட்டிலும் கேட்க முடியும். தேர்வு பயத்தின் காரணமாக வியர்வை, நெஞ்சு படபடப்பு இவற்றை மாணவ மாணவியர் உணர நேரிடும்.
தேவைக்கு அதிகமான பயம், தங்கள் திறமை அளவிடப்பட போகிறதே என்ற அச்சம், தேர்வு முடிவுகளின் விளைவு பற்றிய பதற்றம், பெற்றோரின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, உறவு மற்றும் நட்பு வட்ட குடும்பத்திலுள்ள மாணவ மாணவியருடனான ஒப்பீடு, ஆசிரியர்களின் எதிர்மறை மதிப்பீடு போன்ற பல காரணிகள் தேர்வு காலத்தை விரும்பத்தகாத நாள்களாக மாற்றி விடுகின்றன.
பிள்ளைகளுக்கு பெயர் பெற்ற பள்ளிகளில் சிரமப்பட்டு இடம் பிடித்து, மிகுந்த கஷ்டத்தோடு கல்வி கட்டணம் செலுத்தியதை விட, தேர்வு நாள்களில் அதிக கவனத்தோடு பராமரிக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது.
தேர்வு நாள்களில் எப்போதும் படிக்கும்படி பிள்ளைகளை துரத்த வேண்டாம். தொடர்ந்து படிக்கும் பிள்ளைகளை பத்து நிமிடமாவது ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துங்கள். எக்காரணம் கொண்டும் உடன் படிக்கும் மாணவ மாணவியர் அல்லது உறவினர்களோடு பிள்ளைகளை ஒப்பிட்டு பேசாதிருங்கள்.
புரத சத்து அதிகமான முட்டை, பால் மற்றும் தானிய வகை உணவுகளை அதிகமாக கொடுங்கள். கூடுமானவரை எண்ணெய் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணாமல், அவ்வப்போது சத்தான ஆகாரங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். தண்ணீர் அதிகமாக பருகுகிறீர்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். போதுமான தண்ணீர் பருகுவது அவசியம்.
தேர்வு எழுதும்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இரவுப்பொழுதில் நன்றாக உறங்க வேண்டும். கூடுமானவரையில் தேர்வு நாள்களில் சீக்கிரமே படுக்கைக்குச் செல்லும்படி பிள்ளைகளை வழிநடத்துங்கள்.
தேர்வு எழுதிவிட்டு வந்த பின்னர், அன்றைக்கான வினாத்தாளை வைத்து, எந்தக் கேள்விக்கு என்ன பதில் எழுதினாய்? என்று கேட்பதை தவிர்த்து விடுங்கள். அது வீணான கவலையை உண்டாக்கும். எழுதியது எதையும் மாற்ற இயலாது. பின்னர் வரும் தேர்வுக்கு ஆயத்தமாகும் மனநிலையை இவ்வகை தேவையில்லாத பதற்றங்கள் கெடுத்து விடும். ஆகவே, மறுநாள் அல்லது அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாகும்படி உற்சாகப்படுத்துங்கள்.
தேர்வுக்குத் தேவையான பேனா, பென்சில் ஏனைய பொருள்களை முந்தைய தினமே ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துங்கள். தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்துக்கு முன்னரே சென்று சேர்ந்தால் அமைதியாக தேர்வு எழுத இயலும்.
கூடுமானவரை எதிர்மறை பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்; பிள்ளைகள் சிறந்த வெற்றி பெற வாழ்த்துகள்!