ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் தங்களது நாட்டில்தான் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோசி சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெய்சியே முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் எங்களது நாட்டில்தான் இருக்கிறார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயார். அதே நேரத்தில் மசூத் அசாருக்கு எதிரான ஆவணங்கள் இருந்தால்தான் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்.
இவ்வாறு குரோசி கூறினார்.
சர்வதேச பயங்கரவாதி தங்கள் நாட்டில் பதுங்கி இருப்பதை பாகிஸ்தான் அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பது சர்வதேச ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.