கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குமரி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தியதால் போர்க்களமானது.
குமரியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவதற்காக நெல்லையில் இருந்து மதிமுக தொண்டர்களுடன் வைகோ வாகனங்களில் சென்றார். குமரி மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்த போலீசார் வைகோவை தடுத்து நிறுத்தினர்.மேற்கொண்டு முன்னேற போலீசார் அனுமதிக்காததால் வைகோ வாக்குவாதம் செய்தார். அப்போது மதிமுகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் மதிமுகவினர் மீது பாஜகவினர் சிலர் கற்களை வீசியதால் அவர்களை மதிமுக தொண்டர்கள் விரட்டிச் செல்ல அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தியதால் அந்த இடமே போர்க்களமானது.
உடனடியாக மைக் பிடித்த வைகோ தொண்டர்களை அமைதியாக இருக்கும் படி சமாதானப்படுத்தினார். அதன் பின் அங்கேயே மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வைகோ, கறுப்பு பலூன்களையும் பறக்க விட்டார்.
வைகோவின் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குமரி மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் பதற்றமான சூழல் நிலவியது.