அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முதன் முறையாக இன்று கோயம்பேடு கட்சி அலுவலகம் வந்தார். தேமுதிக தேர்தல் கூட்டணி குழுவினருடன் ஆலோசனையிலும் விஜயகாந்த் ஈடுபட்டார்.
தேமுதிக பொதுச் செயலர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து 12 நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்,நடிகர் ரஜினி உள்ளிட்ட சந்தித்து நலம் விசாரித்தனர். வீட்டில் இருந்தபடியே மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தி வந்தார்.
தேமுதிக யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது. தேமுதிக வரவை எதிர்பார்த்து திமுகவும், அதிமுகவும் பிற கட்சிகளுடனான கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிக்கின்றன.
இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் இன்று திடீரென வருகை தந்தார். சிகிச்சைக்குப் பின் முதன் முறையாக கட்சி அலுவலகம் வந்ததால் தொண்டர்கள், நிர்வாகிகள் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோரும் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற இறுதி முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.