தேர்வுக்குப் பின்னான மனநிலை: எப்படி கையாள்வது?

Does your child have low self-esteem and anxiety?

by SAM ASIR, Mar 21, 2019, 18:16 PM IST
ப்ளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி விட்டு வரும் மகன் செந்திலிடம், "எக்ஸாம் எப்படி எழுதியிருக்கே?" என்று தினந்தோறும் கேட்பார் பாஸ்கர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, "ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்கணும்," என்று சொல்லி கொண்டேயிருக்கிறார் அவர். செந்திலும் முடிந்த அளவு முயற்சித்து படித்து வந்தான். 
ஆனால், தேர்வு எழுதி முடித்த பின், அவன் மனநிறைவுடன் இல்லை.
 
"எல்லா கொஸ்டினுக்கும் பதில் எழுத முடியலைப்பா," என்றான் முதல் நாள்.
"ஏன்... நல்லாதானே படிச்சே?" என்று பதற்றத்துடன் கேட்டார் பாஸ்கர்.
"நல்லாதான் படிச்சேன்... முழுசா எழுதறதுக்குள்ளே டைம் முடிஞ்சிடுச்சு," என்றான் செந்தில்.
 
தமிழ், ஆங்கிலம் என்று மொழிப்பாடங்களிலேயே பிரச்னை என்றால், ஏனைய பாடங்களில் கேட்கவே வேண்டாம்!
 
பாஸ்கர் நொந்துபோய் விட்டார்! ப்ளஸ் டூ படிக்கிறான் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உறவு வட்டத்தில் நடந்த திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவனை அழைத்துச் சென்றதில்லை. "மகனை கூட்டிட்டு வரலையா?" என்று கேட்டவர்களிடமெல்லாம், "ப்ளஸ் டூ எழுதணும்... படிக்க சொல்லியிருக்கேன்," என்றே கூறி வந்துள்ளார். 
 
இவன் வேறு இப்படி சொல்கிறானே? தேர்வு முடிவு வந்தால் விசாரிப்பவர்களிடம் என்ன சொல்வது? என்ற உணர்வு அவரை  அலைக்கழித்தது. அந்த நேரம் அவரைப் பார்க்க நீண்டநாள் நண்பர் கேசவன் வந்திருந்தார். பாஸ்கரின் முகத்தை பார்த்து விட்டு என்னவென்று விசாரித்தார். "இப்படி ஒண்ணுக்கும் பிரேயோஜனமில்லாம போயிட்டானே," என்று மகனைப் பற்றிய தன் கவலையை பகிர்ந்து கொண்டார் பாஸ்கர். கேசவன், செந்திலிடம் பேசினார். அவன், "எவ்வளவோ கஷ்டப்பட்டு படிச்சேன்... இன்னும் கொஞ்சம் நல்லா பரீட்சையில எழுதியிருக்கலாம். அப்பாவும் வருத்தப்படுறார்," என்று தன் நிலையை கூறினான்.
 
கேசவன், பாஸ்கரிடம் போய் உட்கார்ந்தார். "அவன் என்ன சொல்றான்?" வெறுப்புடன் கேட்டார் பாஸ்கர்.
 
"உனக்குதான் ஆலோசனை தேவை. அவனுக்கு அல்ல," என்று கூறிய கேசவன், பாஸ்கரிடம் பின்வருமாறு கூறினார்.
 
தந்தை, தாய் ஆகிய பெற்றோருக்கு பிள்ளைகளைக் குறித்து இருப்பது 'நடைமுறை குற்றவுணர்ச்சி'. "மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பிள்ளை எடுக்கும் மதிப்பெண் குறித்து சமுதாயம் என்ன நினைக்கும். எந்த முகத்தோடு உறவினர்களை பார்ப்பேன்?" என்ற கவலை. இது, பிள்ளைகளை பிரயோஜனமில்லாதவர்கள் என்று கருதுவதால் வருகிற உணர்வு.
 
பிள்ளைகளிடம் இருப்பது, 'நிறைவை எட்ட முடியாத குற்றவுணர்ச்சி'. இருத்தலியல் வகையைச் சேர்ந்த இது, "இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருந்தால் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கலாம்," என்ற உணர்வு. முயற்சி செய்தும் முழு பயனை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம்.
 
பிள்ளைகளிடம் இருக்கும் இரண்டாம் வகையல்ல, பெற்றோரிடம் இருக்கும் முதல் வகை குற்றவுணர்ச்சியே ஆபத்தானது.
 
"நீ பிரயோஜனமில்லாதவன், பிரயோஜனமில்லாதவள்" என்பதாக பிள்ளைகளைப் பார்ப்பது, ஏற்கனவே நொந்துபோய் இருக்கும் மனதை இன்னும் புண்ணாக்கும் காரியம். மாறாக, மனமுடைந்து போயிருக்கும் பிள்ளையின் அருகில் அமர்ந்து, "இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மதிப்பெண் எடுத்திருக்கிறாயே... அப்பாவுக்கு சந்தோஷம். இன்னும் சாதிப்பதற்கு வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கிறது. நன்றாக முயற்சி செய்," என்று ஆறுதலாக பேசினால், எதிர்பார்த்த உயர்வெற்றியை எட்ட முடியாத உங்கள் பருவவயது பிள்ளை மனந்தளர மாட்டான்.
 
ஆம், வெற்றிக்கென போராடிய பிள்ளையை, வெற்றியடைந்தவனாகவே, வெற்றியடைந்தவளாகவே உணரச் செய்வது பெற்றோரின் கரங்களில்தான் உள்ளது. பெற்றோர் பேசும் சரியான வார்த்தை, பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமடையச் செய்யும். 

You'r reading தேர்வுக்குப் பின்னான மனநிலை: எப்படி கையாள்வது? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை