போரடிக்கிறது என்று பிரௌஸ் பண்றீங்களா?

Internet addiction can affect your health, work

by SAM ASIR, Apr 1, 2019, 19:34 PM IST

அலுவலகத்தில் வேலை செய்து சலித்துப்போய் இணையத்தில் மேய ஆரம்பிப்பவர்கள், அதற்கு அடிமைகளாகிவிடுகின்றனர் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இணைய உலகில் கட்டுண்டு கிடப்பது, வேலை திறனை பாதிப்பதோடு, உடல் மற்றும் மனநல பாதிப்புகளையும் உருவாக்குகிறது என்று தெரிய வந்துள்ளது.

மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) சார்பில் இயங்கும் மருத்துவமனைக்கு இணையம் மற்றும் மொபைல் போன் போன்றவற்றிற்கு அடிமையாகி சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆகவே அந்த மருத்துவமனை கடந்த ஆண்டு (2018) இணைய மேய்ச்சலுக்கு அடிமையாகி இருப்போர் பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது.இணையத்தில் ஆபாச தளங்களை பார்க்கும் வழக்கத்திற்கு அடிமையாகிப் போயிருந்த பெங்களூருவை சேர்ந்த 25 வயது தனியார் நிறுவன ஊழியர் உள்பட, தனியார் மற்றும் அரசு அலுவலக ஊழியர்கள் 250 பேரிடம் ஓர் ஆண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற அத்தனை பேரும் 25 முதல் 35 வயது உள்ளவர்கள்.வேலையில் சலிப்புதட்டும் நேரம் இணையத்தை பயன்படுத்த ஆரம்பிப்பவர்கள் மெதுவாக அதற்கு அடிமைகளாகிப் போகின்றனர் என்று இந்த ஆய்வை நடத்திய மருத்துவர் கூறியுள்ளார்.

ஆய்வில் பங்கேற்றவர்களுள் 9.2 விழுக்காட்டினர் மிகவும் ஆபத்தான அடிமைத்தன நிலையை அடைந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இணையத்தில் உலாவும் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் வேலைதிறன் மற்றும் வேலையில் கவனம் குறைந்து போகிறது. பணி நேரத்தில் தனி விருப்பத்தின்பேரில் இணையத்தில் உலாவுவது நேர விரயத்திற்கு காரணமாகிறது. உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்யவேண்டிய நேரம், இணையத்தை பார்ப்பதில் வீணாகிறது. ஆகவே, ஆரோக்கியம் கேடடைகிறது.

குடும்பத்தினருடன் செலவு செய்ய வேண்டிய நேரத்தை இணையத்தில் வீணாக்குவதால் குடும்ப பிரச்னைகள் தலைதூக்குகின்றன. அதிகமான நேரத்தை இணையம் மற்றும் மொபைல் போனில் செலவழிப்பவர்களால் இரவில் போதுமான நேரம் உறங்க முடிகிறதில்லை. தூக்கம் குறைவது பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.

எப்போதும் இணையமே கதி என்று கிடப்பவர்கள் பலர் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. அதுவும் ஆரோக்கியமான உணவை உண்பதில் கவனம் செலுத்துவதில்லை. உடல்நலம் மற்றும் பணிநலம் இரண்டிற்கும் கேடாக விளங்கும் இந்த அடிமைத்தனத்திற்குள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள்!

You'r reading போரடிக்கிறது என்று பிரௌஸ் பண்றீங்களா? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை