வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன.
வாட்ஸ்அப் செயலியை திறப்பதற்கு ஆளறி (Face ID) மற்றும் விரல்ரேகை (Touch ID) ஆகியவை ஐஓஎஸ் தளத்தில் கடவுச்சொற்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் 2.19.3 பீட்டா வடிவில் விரல்ரேகையை (fingerprint) வாட்ஸ்அப் செயலியை திறப்பதற்கு பயன்படுத்தும் வசதி வர உள்ளது. இது இன்னும் ஆய்வு நிலையில் இருப்பதால் தற்போது இப்புதிய வசதியை அனைத்து பயனர்களும் காண இயலாது.
செட்டிங்க்ஸ் என்னும் உள்ளமைப்பில் புதிய பகுதியாக விரல்ரேகை மூலம் திறக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளமைப்பு>கணக்கு>தனியுரிமை என்ற பிரிவுக்குள் 'திறப்பதற்கு விரல்ரேகையை பயன்படுத்துக' ( > Account > Privacy followed by the option to Use Fingerprint to Unlock.) என்ற அம்சம் இருக்கும்.
இதை பயன்பாட்டுக்கு தெரிவு செய்தபின்னர், வாட்ஸ்அப், பயனரின் விரல்ரேகையை பதிவு செய்யுமாறு கேட்கும். அதன்பின்னர், பயன்பாட்டுக்கு பிறகு எவ்வளவு நேரத்தில், அதாவது உடனடி/1 நிமிடம் / 10 நிமிடம் / 30 நிமிடம் செயலி மூடப்படவேண்டும் என்பதை தெரிவு செய்யவேண்டும்.
இது தவிர ஆண்ட்ராய்டு பீட்டாவில் இருள் வடிவமாகிய 'டார்க் மோடு' கொண்டு வரும் பணிகளும் நடந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.