போடா வெங்காயம் என்று சொல்லாதீர்கள்!

Benefits Of Onion Its Side Effects

by SAM ASIR, Apr 14, 2019, 12:30 PM IST

வெங்காயத்தைப் பற்றி என்றாவது யோசித்திருப்போமா? "கிலோ என்ன விலை?" என்று கேட்பதை தவிர அதைப் பற்றி அநேகமாக எதுவும் பேசியிருக்கமாட்டோம். வெங்காயத்தில் அடங்கியுள்ள தாதுகள் மற்றும் பயன்தரும் சத்துகள் பற்றி அறிந்திருந்தால் யாரையும் "போடா வெங்காயம்" என்று விரட்ட மாட்டோம்.

நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கியுள்ள ஆற்றல் 40 கலோரி ஆகும். 0.1 கிராம் கொழுப்பு, 4 மில்லி கிராம் சோடியம், 146 மில்லி கிராம் பொட்டாசியம், 9 கிராம் கார்போஹடிரேட் என்னும் சர்க்கரை, 1.1 கிராம் புரோட்டீன் என்னும் புரதச் சத்து உள்ளது.

0.02 விழுக்காடு கால்சியம், 12 விழுக்காடு வைட்டமின் சி, 1 விழுக்காடு இரும்பு சத்து, 5 விழுக்காடு வைட்டமின் பி-6, 2 விழுக்காடு மெக்னீசியம் என்ற அளவில் தாதுகள் மற்றும் வைட்டமின்கள் வெங்காயத்தில் உள்ளன.

புற்றுநோயின் எதிரி

சிவப்பு வெங்காயம் புற்றுநோயின் எதிரி ஆகும். அதில் உள்ள குவார்சிட்டின் (Quercetin) என்னும் கூட்டுப்பொருள் புற்றுநோயை தடுக்கக்கூடியது ஆகும். மார்புப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் கிருமியை அழிக்கக்கூடிய ஆற்றல் சிவப்பு வெங்காயத்தில் உள்ளது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்எஸ்-மெத்தில்சிஸ்டெய்ன் (S-methylcysteine) என்னும் கந்தக கூட்டுப்பொருளும் குவார்சிட்டினும் வெங்காயத்தில் உள்ளன. இவை நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடியவை. வெங்காயத்திலுள்ள குரோமியம், இரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.

காயத்தை ஆற்றும்

வெங்காயத்தில் காணப்படும் குவார்சிட்டின் மற்றும் அதைப்போன்ற பொருள்கள் உடலில் அழற்சி ஏற்படுவதை தடுக்கின்றன. அலர்ஜி என்னும் ஒவ்வாமைக்குக் காரணமாகும் ஹிஸ்டமைன் என்னும் வேதிப்பொருள் உடல் செல்களிலிருந்து வெளியாவதை வெங்காயம் தடுக்கிறது. ஆகவே, உடலில் ஒவ்வாமை நேராமல் காக்கப்படுகிறது. மூக்கடைப்பை குவார்சிட்டின் தடுக்கிறது. உடலில் ஏற்படும் காயங்கள் விரைவாக ஆறுவதற்கு வெங்காயத்திலுள்ள நோய் எதிர்ப்பு குணங்கள் உதவுகின்றன.

சுவாசத்தை சீராக்கும்

ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டோருக்கு வெங்காய சாறு அருமருந்தாகும். இதிலுள்ள செரிக்க இயலாத கார்போஹைடிரேட்டான பிரிபயோடிக்ஸ் (prebiotics)  மூக்கடைப்பை நீக்கி நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது.

கண்களுக்கு ஆரோக்கியம்

கண்ணின் துல்லிய பார்வைக்கு காரணமான லென்ஸினை வெங்காயத்திலுள்ள கந்தகம் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. கண்ணுக்கு ஊறு விளைவிக்கும் கிளகோமா (glaucoma) மற்றும் கண் புரை ஆகியவை ஏற்படும் அபாயத்தை தடுக்கும் ஆக்சிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்சிடெண்டான குளூததியோன் (glutathione) என்னும் புரத உற்பத்தியை வெங்காயம் ஊக்குவிக்கிறது. கண்களிலுள்ள செல்களை பாதுகாக்கும் வைட்டமின் ஈ உற்பத்தியை தூண்டக்கூடிய செலினியம் வெங்காயத்தில் காணப்படுகிறது. 

பற்களை பாதுகாக்கிறது

கந்தக கலவைகளான தியோசல்பினேட் மற்றும் தியோசல்போனேட்டுகள் (thiosulfinates and thiosulfonates) வெங்காயத்தில் அதிகம் காணப்படுகின்றன. பற்சிதைவுக்குக் காரணமான நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களை இவை மட்டுப்படுத்துகின்றன. வெங்காயத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது ஆகவே, பற்களின் ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது.

வயதாகிறதால் வரும் ஞாபகமறதியை தடுப்பதற்கும் மயக்கம், வலிப்பு போன்ற குறைபாடுகளை தீர்க்கவும் வெங்காயம் பயன்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

You'r reading போடா வெங்காயம் என்று சொல்லாதீர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை