பிறக்கும்போதே நம்முடைய மூளையில் இத்தனை கிராம் புத்திசாலித்தனம், இத்தனை கிராம் ஞாபக சக்தி என்று வைக்கப்படுவதில்லை. மூளையின் திறன் மாறக்கூடியது.
பல்வேறு விதங்களில் நாம் மூளைக்கு அளிக்கும் பயிற்சிகள், சிந்திக்கும் திறனை, புத்திக்கூர்மையை அதிகரிக்கின்றன. சூழ்நிலைகளை ஞானத்தோடு சமாளிக்க, சவால்களை எதிர்கொள்ள மூளையை பழக்குவிப்பது நம் கரங்களில்தான் உள்ளது.
மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள், புதிர்கள், கேள்வி பதில்கள் மற்றும் செஸ் என்னும் சதுரங்கம் இவற்றில் தொடர்ந்து ஈடுபடுவது மூளையை துடிப்பாக வைக்க உதவும். இதுபோன்ற விளையாட்டுகள், செயல்பாடுகள் சில நேரங்களில் புத்துணர்வாகவும் சில நேரங்களில் சோர்வாகவும் உணரச் செய்யும். மூளையின் செல்களுக்கு அவை வேலை கொடுப்பதால் துடிப்பாகவோ அல்லது சோர்வாகவோ உணர வேண்டியுள்ளது. மூளை நன்கு செயல்பட்டால் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
மூளை செல்களுக்கு வேலை தரும் பயிற்சிகள்:
தியானம்: தினமும் பத்து நிமிடங்களாவது தியானம் செய்வது மனக்கலக்கத்தை மேற்கொள்ள உதவும். உங்கள் மனம் நிம்மதியாக இருந்தால், எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் முன்னதாக அதன் நன்மை, தீமைகளை சீர்தூக்கிப் பார்க்க இயலும். இது உங்கள் எல்லா நடக்கையிலும் தாக்கத்தை உருவாக்கும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கும் மூளையை தியானத்திற்காக பத்து நிமிடங்கள் நிறுத்தி வைத்து பழகுவதால், உங்கள் சிந்தனை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இசை: சோர்ந்திருக்கும் மூளையை தூண்டும் திறன் இசைக்கு உண்டு. மூளையின் நுண்அலகான நியூரான்களை இசை பரவசமடையச் செய்கிறது. ஆகவே, சிந்தனை கூர்மையாகிறது. இசையை கேட்பதுடன், ஏதாவது ஓர் இசைக்கருவியை வாசிக்கப் பழகுவதும் நல்லது. எதையாவது கற்றுக்கொள்வது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட மூளையை பழக்குவிக்கும்.
மொழி: மூளை சோர்ந்துபோனால், நாமும் செயலிழந்து விடுவோம். பல்வேறு காரணங்களால் நம் சிந்தனை தடைபட்டிருக்கக்கூடும். புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். எப்போதுமே புதிய முயற்சிகள் மூளையின் செல்களை ஊக்குவிக்கும். புதிய வார்த்தைகளுக்கு பொருள் விளங்கும்போது, அறிவு விருத்தியாகும்போது மூளையின் செல்களும் நன்கு இயங்கும். மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
மனக்கணக்கு: கால்குலேட்டர், கணினி போன்றவை வந்தபின்னர், சாதாரண கணக்குகளை செய்யக்கூட நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். நம் மூளையை பயன்படுத்துவதில்லை. கணக்குளை நாமாக மூளையை உபயோகித்து செய்யும்போது, கூர்மையாக செயல்படும் பயிற்சி மூளைக்குக் கிடைக்கிறது. சிறுவயதிலேயே புத்திக்கூர்மையை தூண்டக்கூடிய கணக்குகளை செய்து பழகுவது மூளை திறனாக வளர உதவும்.
புது சிந்தனை: சிந்தனைக்கு எல்லை கிடையாது. உங்களுக்கென்று எல்லை வகுத்துக்கொள்ளாமல் சிந்தனையை பரவ விடுங்கள். புதிய சிந்தனையால் மூளையில் நியூரான்கள் என்னும் நுண்அலகுகள் வளருகின்றன. புதிய சிந்தனைகள் உங்களில் படைப்பூக்கத்தை அதிகரித்து, புதியவற்றை கண்டுபிடிக்குமளவுக்கு உதவும்.