'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். ஆரோக்கியமான வாழ்வே ஆனந்த வாழ்வு. நம் உடலை நோய்கள் தாக்காதவரைக்கும், கிருமிகள் நமக்குள் குடிகொள்ளாத வரைக்கும் சந்தோஷமாக வாழலாம்.
ஆரோக்கியமாக வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்று கேட்டால், "யோகாசனம் செய்யுங்க" "காலைல எழும்பி ஓடுங்க" "எடை தூக்கி பயிற்சி பண்ணுங்க" "கார்போஹைடிரேட் இருக்கிற உணவை சாப்பிடாதீங்க" "கொழுப்புள்ள ஆகாரம் வேண்டாம்" என்றெல்லாம் வரிசையாக சொல்லிக் கொண்டே போவார்கள்.
இவை எல்லாம் நல்லவைதாம். ஆனால், எல்லாவற்றையும் நம்மால் செய்ய இயலாது. பரபரப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது ஒரு காரியத்தில்தான் கவனம் செலுத்த முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். ஆகவே, கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய ஏதாவது ஒரு காரியம் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் இவற்றில் ஏதாவது ஒன்றையாவது கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
மனதுக்குள் பாருங்கள்:
என்ன உடற்பயிற்சி செய்யலாம்? உடலை எவ்வாறு ஆரோக்கியமாக காத்துக்கொள்ளலாம்? என்று அநேகர் பார்க்கிறார்கள். அது இயல்பான ஒன்றாகி விட்டது. ஆனால், நம் மனம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதும் அவசியம். மன ஆரோக்கியத்தை பற்றிய சுய விழிப்புணர்வை நாம் அடையவேண்டும்.
நம்மை நாம் நேசிப்பதற்கு எது தடையாக இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன? என்று நீங்களே நிதானமாக யோசித்துப் பாருங்கள். இப்படி மனதை ஆராய்ந்து பார்த்து நம் மனநிலை, உணர்வுகள், விருப்பங்கள் எவை என்று சரியாக கண்டறிந்து அவற்றை பராமரிப்பது மன நலத்தை மட்டுமல்ல; உடல் நலத்தையும் பாதுகாக்கும். காலப்போக்கில் அதுவே நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாகவும் விளங்கக்கூடும்.
நாய் வாங்குங்கள்:
ஜிம்மில் உறுப்பினராதல், பைலேட் உடற்பயிற்சி வகுப்பில் சேர்தல், காலையில் ஜாகிங் செல்லுதல் - உடல் ஆரோக்கியத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் முதலில் நினைவுக்கு வருவது இவைதாம். ஆனால், இவற்றை நாம் தொடர்ந்து செய்கிறோமா என்று பார்த்தால் அநேகமாக 'இல்லை' என்பதே பதிலாக இருக்கும். வகுப்பில் சேர்ந்து ஒரு வாரத்திற்குச் செல்வோம். பிறகு சலித்துப்போகும்.
ஆகவே, உடற்பயிற்சியை நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக மாற்றிக்கொள்ளவேண்டும். லிப்ஃட்டில் செல்லாமல் மாடிப்படி ஏறுதல், கடைகளுக்குச் செல்லும்போது தொலைவிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து செல்லுதல் இப்படி சிற்சில விஷயங்களை தொடர்ந்து செய்து வரலாம். இதில் நாய் வளர்ப்பையும் சேர்த்துக்கொள்ளலாம். நாய் ஒன்றை வளர்த்தால், தினமும் காலையும் மாலையும் அரை மணி நேரம் அதனுடன் வெளியே நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். நடப்பது உடலுக்கு நல்லது; நாய்மேல் அக்கறை கொண்டு கவனிப்பது மனதுக்கு நல்லது.
வகைவகையான சாப்பாடு:
வகைவகையான சாப்பாடு என்றவுடன் கோழி, ஆடு, மீன், நண்டு, இறால் என்று பறக்காதீர்கள். இவை காய்கறிகளையும் பழங்களையும் குறிக்கும். ஒரு வாரத்தில் 30 வகையான காய்கறிகளை நாளுக்கொன்றாய், வேளைக்கொன்றாய் சாப்பிடலாம். ஒரு நேரத்திற்குச் சாப்பிட்டது மறுவேளைக்கு இல்லை; ஒரு நாளைக்கு சாப்பிட்டது, மறுநாள் இல்லை என்ற அளவுக்கு வெவ்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இது வயிற்றுக்கும் நல்லது:
அலர்ஜி என்னும் ஒவ்வாமை, உடல் பருமன், வயிற்றுக்கோளாறுகள், பார்கின்சன் என்னும் நடுக்கநோய், மனஅழுத்தம் இவை எல்லாவற்றுக்கும் வயிற்றில் இருக்கும் நுண்கிருமிகளுக்கும் தொடர்பு உண்டு. நுண்கிருமிகளை அகற்றிவிட்டால் மேற்கண்ட எந்த நோயும் வராது. வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாக காக்கவும் இதுபோன்று பல்வகை காய்கறிகளை சாப்பிடுவது அவசியம்.
சந்தோஷம்:
இலக்குகளை நிர்ணயிப்பது அவற்றை எட்ட முடியாமல் மனச்சோர்வு கொள்வது அநேகருக்கு உள்ள பிரச்னை. உதாரணமாக, அடுத்த வாரத்திலிருந்து ஒழுங்காக நடைப்பயிற்சி செல்ல வேண்டும், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு அதைச் செய்யாமல் விடுதல்.
இதுபோன்று இலக்குகளை நிர்ணயித்து தோற்பதை விட, நம் மனதிற்குப் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்து முடிப்பது ஊக்கமளிக்கும். "இன்றைக்கு உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்கோம்" என்று இரவில் திருப்திப்பட இது உதவும். மனம் விரும்பும் செயல்களை செய்துமுடியுங்கள்; அது பதியாத விஷயங்களில் உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
தூக்கம்:
ஆரோக்கியமாக இருப்பதற்கும் உறக்கத்திற்கும் என்ன சம்மந்தம்? என்று நீங்கள் கேட்கலாம். ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளில் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும். தினமும் உறங்கினாலும், உறங்கும் நேரம் குறைந்தால், உதாரணமாக தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் அது நம் முடிவெடுக்கும் திறனை பாதிக்கும். ஆகவே, ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆழ்ந்து உறங்குவது அவசியம்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக தேநீர், காஃபி போன்ற பானங்களை அருந்தவேண்டாம். தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றை பார்ப்பதும் உறக்கத்தை கெடுக்கும்.
மேற்கூறப்பட்டவற்றை கருத்தாய் செய்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.