அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை எனப் பெயர் உண்டாயிற்று. அதிக உயரம் வளராது. பொதுவாக ஓரடிக்கு மேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. சுமார் ஒரு வருடம் வரை பலன்தரும். இக்கீரை மேல் நிறம், பச்சை நிறமாகத் தோன்றும். அடிப்பாகம் மெல்லிய செந்நிறத்தோடு விளங்கும். இலையின் காம்புகளிலும் செந்நிறம் தோன்றும். இந்தக் கீரையும் இதன் விதையும் இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது.
சத்துகள்
100 கிராம் அளவு அரைக்கீரையில் 91.69 கிராம் நீர் உள்ளது. 2.46 கிராம் புரதம், 0.33 கிராம் கொழுப்பு (லிபிட்), 4.02 கிராம் கார்போஹைடிரேடு, 215 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), 2.32 மில்லி கிராம் இரும்புச் சத்து, 55 மில்லி கிராம் மெக்னீசியம், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ், 611 மில்லி கிராம் பொட்டாசியம், 20 மில்லி கிராம் சோடியம் உள்ளது.
ஔவையாரால் பாடப் பெற்றது
“அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்.”
என்று திருமந்திரத்தில் ஔவையார் பாடியுள்ளார். அதன் மூலம் இதன் சிறப்பை அறிந்து கொள்ள இயலும்.
பொதுப் பண்பு
சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் நீக்கும். உடல் சூட்டைச் சமப்படுத்தும், ஆண்மையைப் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும்; இதயம், மூளை வலுப்பெறும்.
நரம்புத் தளர்ச்சி
அரைக்கீரையில் சாறு எடுத்து, அந்தச் சாற்றில் மிளகை ஊறவைத்து பின்னர் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த மிளகுப் பொடியில் ஐந்து சிட்டிகை அளவு எடுத்து தினமும் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும். அரைக்கீரை நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னி தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை குணமாக்கக்கூடியது.
இரத்த சோகை
அரைக்கீரையில் இரும்புச் சத்து உள்ளது. அரைக்கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரித்து இரத்த சோகை மறையும்.
காய்ச்சல்
அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும், அதில் கிடைக்கும் சாற்றை வடித்து சோற்றில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
ஜன்னி
அதிக காய்ச்சல் ஏற்பட்டால் சிலருக்கு வலிப்பு போன்ற ஜன்னி ஏற்படும். அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு , இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் போட்டுக் குடித்தால் குளிர் காய்ச்சல், ஜன்னி போன்றவை குணமாகும்.
சளி
அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் போட்டு தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் சளி, இருமல், நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
மலச்சிக்கல்
அரைக் கீரையுடன் பாசிப் பயிறு, மிளகு, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
விந்தணு விருத்தி
அறுகீரை அல்லது அரைக்கீரை, விந்தணுவைப் பெருக்கும் கீரைகளில் ஒன்று. அரைக்கீரையை. புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும்.
தாய்மை
இந்தக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுப்பதனால் குழந்தை பெற்ற பெண்களுக்கு ஓர் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. பிரசவித்த பெண்களுக்குச் சீதளம் வராமல், இக்கீரையில் அடங்கியுள்ள சத்துகள் பாதுகாக்கின்றன. அத்துடன் பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குச் சக்தியையும் பலத்தையும், கொடுக்கின்றன. அன்றியும் இக் கீரையிலுள்ள சத்துகள் தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றன; குழந்தைக்குப் பலத்தையும் உரத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மை பெற்றது. அதனால்தான் பேறுகாலமான பெண்களுக்கு அரைக்கீரையை உணவாகக் கொடுக்கும் பழக்கம் உள்ளது.
அரைக்கீரை தைலம்
அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் புகழ்பெற்றது. இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது. மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும். தலைமுடி கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவிவர வேண்டும்.
கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
அரைக் கீரை - 1 கட்டு; பெரிய வெங்காயம் - 1; காய்ந்த மிளகாய் - 5; கடுகு - கால் தேக்கரண்டி; கடலைப் பருப்பு - கால் தேக்கரண்டி; உடைத்த உளுந்து - கால் தேக்கரண்டி; எண்ணெய் - 2 தேக்கரண்டி; தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி; உப்பு - தேவையான அளவு
செய்முறை: கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். காய்ந்த மிளகாயை நறுக்கி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் சிவக்கும் வரை நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கீரையைப் போட்டு வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும். கீரையில் உள்ள தண்ணீர் சுண்டி, கீரை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து லேசாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
கீரை நிறம் மாறாமல் இருக்கக் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம். கீரையை மூடி வைக்காமல் மிதமான நெருப்பில் வேக வைப்பதனால் கீரையில் உள்ள சத்துக்கள் அழியாமலும், நிறம் மாறாமலும் இருக்கும்.