திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி (28).கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற டிரைவருடன் மாலதி பழகி வந்துள்ளார். மாலதியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சதீஷ் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நெருக்கம் காரணமாக மாலதி கர்ப்பிணி ஆனார். தொடர்ந்து இவர் ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். மாலதி குழந்தையை தன்னுடன் வைத்திருந்தார்.
இதற்கிடையே டிரைவர் சதீஷுக்கு அவரது பெற்றோர் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த மாலதி, நேற்று மாலை தாண்டிக்குடி கே சி பட்டியிலுள்ள சதீஷின் வீட்டிற்குத் தனது குழந்தையுடன் சென்றார். வீட்டு வாசல் முன்பு அமர்ந்து நியாயம் கேட்டுள்ளார். ஆனால், சதீஷின் பெற்றோர் மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அங்கிருந்து விரட்டினர். இதனால், மனவேதனை அடைந்த மாலதி தன்னுடைய குழந்தையை அருகில் உள்ள கடை ஒன்றில் அமர வைத்துவிட்டு, பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியினர் மாலதியைத் தடுக்காமல் அவர் உடலில் தீ வைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல், அந்த கொடூர சம்பவத்தைச் சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். யாரும் தடுக்காததால் உடல் கருகி மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்களின் அலட்சியத்தால் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிர் பறிபோனது.