“உடல் எடை கூடாது..மன அழுத்தத்தை மாற்றும்” - வேர்க்கடலையின் மருத்துவப் பலன்கள்...!

by SAM ASIR, Sep 3, 2020, 19:22 PM IST

'டைம் பாஸ்' - வேர்க்கடலையை பற்றி நாம் இவ்வளவு தான் தெரிந்து வைத்திருக்கிறோம். நீண்ட பயணங்களில், கடற்கரைகளில், பூங்காக்களில் நேரத்தை போக்குவதற்காக சாப்பிடப்படுவது வேர்க்கடலை என்பதை தவிர வேறு எதையும் யோசிப்பதேயில்லை. ஒரு சிலர் இதை சட்னி வைப்பதற்கு பயன்படுத்துவர். பலர் கொழுப்பு என்று கூறி தவிர்த்துவிடுவர்.


வேர்க்கடலை, உண்மையில் நம் உடலுக்கு பல நன்மைகளை செய்யக்கூடியது. அது இன்றியமையாத சத்துகள் நிறைந்தது.இதயத்திற்கு நல்லது. வேர்க்கடலையிலுள்ள பல்வேறு கொழுப்பு வகைகள் இதயத்திற்கு ஆரோக்கியம் தருபவை. வேர்க்கடலையில் ஓலியிக் என்ற அமிலம் உள்ளது. இது உடலுக்குக் கேடு செய்யக்கூடிய கொலஸ்ட்ராலை குறைத்து, நன்மை செய்யக்கூடிய கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. அதன் மூலம் பக்கவாதம் மற்றும் இதய தமனியில் ஏற்படக்கூடிய நோயை தடுக்கிறது.


மூளைக்கு ஏற்றது
வேர்க்கடலையில் வைட்டமின் பி3 (நியாசின்) என்ற சத்து காணப்படுகிறது. இது மூளையின் செயல்பாட்டை தூண்டி, நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வேர்க்கடலையிலுள்ள ரெஸ்வரட்ரோல் என்ற ஃப்ளேவனாய்டு மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


எடையை குறைக்கும்
அதிக அளவு நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். வேர்க்கடலையில் அதிகமான நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் இருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு திருப்தியாக உணருவோம். பசியை குறைப்பதால் தேவையற்ற தின்பண்டங்களை தவிர்ப்போம். இதனால் உடலுக்கு நன்மை செய்யும் சத்துகள் மட்டுமே சேரும். ஆகவே, உடல் எடை கூடாது. மேலும் உடலின் வளர்சைதை விகிதத்தை அதிகரிக்கக்கூடிய ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு.


மன அழுத்தத்தை மாற்றும்
செரோட்டோனின் என்பது மூளையில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். நம் மனநிலையை மாற்றுவதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் வேர்க்கடலையில் உள்ளது. இந்த அமினோ அமிலம் செரோட்டோனின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் மனக்கலக்கம் குறைந்து மனச்சோர்வு மறைகிறது.


நீரிழிவுள்ளோர் சாப்பிடலாம்
கிளைசெமிக் குறியீடு என்று ஒரு எண் உள்ளது. வேர்க்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. மாங்கனீசு என்ற தாது, கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேடின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் சுண்ணாம்புச் சத்தை உடல் கிரகிப்பதிலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்ப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மாங்கனீசு அதிக அளவில் வேர்க்கடலையில் காணப்படுகிறது. ஆகவே, நீரிழிவு நோயுள்ளார் இதை சாப்பிடலாம்.


இளமை தோற்றம்
வேர்க்கடலையிலுள்ள பூரித கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் இ, முதுமையின் முகவரியை மறைப்பவை. வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வரட்ரோல் என்னும் பைட்டோகெமிக்கல் முதுமை தோற்றத்தை தடுக்கக்கூடியது; இது சருமத்திற்கு பொலிவூட்டுகிறது. பி வகை வைட்டமின்கள் இதில் உள்ளன. இவை பயோடினாக மாறி, கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.


மகப்பேறு
கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கியமான சத்து ஃபோலிக் அமிலமாகும். இது வேர்க்கடலையில் அதிகம் உள்ளது. தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். அதில் கட்டிகள் உருவாகாது. கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக அமையும். கருவுறுவதற்கு முன்பிருந்தே இதை சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
பித்தப்பை கல். தினமும் வேர்க்கடலை சாப்பிடுவோருக்கு பித்தப்பையில் கல் உருவாகும் வாய்ப்பு மிகவும் குறைவு. பித்தப்பை குறித்த ஆய்வு முடிவுகள் இதை தெரிவித்துள்ளன.

READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை