உடலுக்குச் சத்து தரும் உணவுகளைச் சாப்பிடவே அனைவரும் விரும்புவோம். 'உணவே மருந்து' என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நாம் தரமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்ளலாம். எவற்றைச் சாப்பிடலாம்; எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று எளிதாகப் பிரித்துவிடலாம். ஆனால், எப்பொழுது எவற்றைச் சாப்பிடக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும் அதை எப்போது சாப்பிடவேண்டும்; எப்போது சாப்பிடக்கூடாது என்ற முறை உள்ளது. இரவில் உறங்கச் செல்லும் முன்னர் சில உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இலை வகை காய்கறிகள்
பிரொக்கோலி, காலிஃபிளவர், முட்டைகோஸ் போன்றவை பொதுவாக ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ஆனால், அவை செரிமானமடைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். அவற்றில் கரையாத நார்ச்சத்து அதிகம். ஆகவே, பகலில் அவற்றைச் சாப்பிட்டால் முழுவதுமாக செரிமானமாக ஏதுவாக இருக்கும். இவற்றை இரவில் சாப்பிட்டால் அவற்றின் செரிமானம் வயிற்றில் நடைபெறும்போது ஆழ்ந்து உறங்க இயலாது.
ஐஸ்கிரீம்
இரவில் ஐஸ்கிரீமை சுவைப்பது இன்பமான அனுபவம் தான் ஆனால் ஐஸ்கிரீம் செரிப்பதற்கு நேரம் பிடிக்கும். ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். ஆகவே, உறக்கம் கலைந்து போகும். செரிமானமாதல், சர்க்கரை சேர்தல் ஆகிய இரண்டு காரணங்களால் ஐஸ்கிரீம் உறக்கத்தைத் தடை செய்கிறது. மிட்டாய்கள், கேக் போன்ற இனிப்பு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் தூங்குவதற்கு உதவும்.
தக்காளி
தக்காளி சருமத்திற்கு நல்லது. தக்காளியில் டைரமின் என்ற அமினோ அமிலம் உள்ளது. டைரமினுக்கு மூளையின் செயல்பாட்டைத் தூண்டக்கூடிய பண்பு உள்ளது.ஆகவே, இரவில் அதைச் சாப்பிட்டால் தூக்கத்தைக் கெடுக்கும்.
ஆரஞ்சு வகை பழங்கள்
சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்ளிமாஸ், எலுமிச்சை ஆகியவை சிட்ரஸ் இன பழங்களாகும். இவற்றில் வைட்டமின் 'சி' சத்து மிக அதிகம். பொதுவாக இவை உடலுக்கு அதிக நன்மை தருபவை. ஆனால், இரவில் இவற்றைச் சாப்பிட்டால் அவற்றிலுள்ள அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளைக் கொண்டு வரலாம். மேலும் இரவில் சாப்பிட்டால், மறுநாளும் இவை எதிர்மறை விளைவுகளுக்குக் காரணமாகும்.
இறைச்சி
ஆடு, மாடு போன்ற விலங்குகளின் இறைச்சி அதிக புரதச் சத்து நிறைந்தது. ஆகவே, இரவில் அவற்றை இரவில் சாப்பிடுவதால் உறக்கம் கெடும்.
காஃபி
காஃபைன் சேர்ந்த எந்தப் பொருளையும் உறங்குவதற்கு முன்பு சாப்பிடக்கூடாது. பல சாக்லேட்டுகள் காஃபைன் உள்ளவை. ஆகவே, அவற்றைச் சாப்பிடுவதையும் காஃபி அருந்துவதையும் தவிர்த்தால் நித்திரை இன்பமாக இருக்கும்.