நாற்பது - துடிப்பும் மன அழுத்தமும் சரி சமமாக இருக்கக்கூடிய வயது. இவற்றையெல்லாம் செய்து விட வேண்டும் என்ற ஆர்வமும், பல சவால்களைச் சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் நிறைந்திருக்கும். நாற்பது வயதில் சிலர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கக்கூடும்; பலருக்கு வாழ்வியல் முறை காரணமான நோய்கள் தலைகாட்டத் தொடங்கும்.வேலை, குடும்பம், பொருளாதார நெருக்கடி ஆகிய பல காரணிகள் உடல் நலகேடுகளை கொண்டு வரலாம். ஆகவே, முன்பு போல் இல்லாமல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டியது அவசியம். நாற்பது வயதில் உணவு, வாழ்வியல் முறை ஆகியவற்றில் வேண்டிய மாற்றங்களைச் செய்து கொண்டால் ஐம்பது, அறுபது, எழுபது ஆகிய முதிய பருவத்தில் பெரிய அளவில் ஆரோக்கிய குறைபாடு உண்டாகாமல் தடுக்கலாம்.
உடல் நல குறைபாடுகள்
நாற்பது வயதாகிவிட்டால் கொலஸ்ட்ரால் அளவு உயர்தல், நீரிழிவின் ஆரம்பக் கட்டம், உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு, இரத்தக் கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றோடு முதுமையின் அடையாளமாக முதுகு வலி, மூட்டு வலி ஆகியவையும் வர ஆரம்பிக்கும்.
தேவைப்படும் ஊட்டச்சத்து
நாற்பது வயதில் சரிவிகித உணவுகளைச் சாப்பிடவேண்டும். இப்பருவத்தில் உடலுக்குப் பலன், தொடர் உழைப்பால் களைப்படையாத திறன் ஆகியவற்றையும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளை தரக்கூடிய உணவுகளைச் சாப்பிடவேண்டும். ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் முதுமையைத் தள்ளிப்போடும். இதய ஆரோக்கியம், இனப்பெருக்க ஆற்றல் மற்றும் தசை ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு பத்தாண்டுக் காலத்திலும் நம் உடலின் வளர்சிதை மாற்ற ஆற்றலில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும். ஆகவே, உடல் எடை மற்றும் ஆற்றல் ஆகியவற்றைச் சீராகப் பராமரிக்கும் முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
நல்ல புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, முழு தானியங்கள், தேவையான அளவு நார்ச்சத்து, அதிக ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், திரவ உணவு ஆகியவற்றை உட்கொள்ளவேண்டும்.
முன்னெச்சரிக்கை
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுடன் போதுமான தூக்கம், நீர் அருந்துதல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்தல், காஃபி போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்தல், புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை விட்டுவிடுதல் ஆகியவையும் முக்கியம்.
சாப்பிட வேண்டியவை
புரதம்: புரதம் நிறைந்த தாவர உணவு, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, முட்டை, மீன், நட்ஸ் (கொட்டை வகை உணவு), கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருள்கள் ஆகியவை இவ்வயது தரப்பினருக்கு ஏற்றவை.
முழு தானியங்கள்: ஓட்ஸ், உடைத்த கோதுமை, சிறுதானியங்கள், சிவப்பு அரிசி ஆகியவை நாள்முழுவதும் செயல்படுவதற்கான ஆற்றலைத் தரும். இவற்றிலுள்ள வைட்டமின் பி சத்து, செரிமானம் மற்றும் மலம் கழிதலைச் சீராக்கும்.
ஆரோக்கியமான கொழுப்பு: அவகாடோ, ஆலிவ், நட்ஸ் (கொட்டை வகை உணவு), விதை வகைகள் ஆகியவை ஆண்களில் இதய ஆரோக்கியத்துக்கும் இனப்பெருக்க ஆற்றலைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவும்.
நார்ச்சத்து: இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றைச் சீராக வைப்பதற்கு நார்ச்சத்து உதவும். நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் நெடுநேரம் பசி தாங்கும். வயிறு காலியாக இருக்கும் உணர்வு எழாததால் நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடும் எண்ணம் வராது. நொறுக்குத்தீனிகள் மற்றும் தின்பண்டங்களைச் சாப்பிடாததால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் விகிதம் குறையும். நார்ச்சத்து அதிகமான பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவது புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கும்.
பிரெக்கோலி, கோஸ், காலிஃப்ளவர், கிரீன் டீ, சமைத்த தக்காளி, வால்நட், மீன் ஆகியவையும் புரோஸ்டிரேட் சுரப்பியின் செயல்பாட்டைப் பராமரிக்க உதவும்.
திரவ உணவு: தசையின் செயல்பாடு மற்றும் சிறுநீரக செயல்பாடு இவற்றுக்கு நீர் அதிகம் தேவை. 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீராகக் குடிக்க மனமில்லையானால் இயற்கையாகச் சுவையூட்டப்பட்ட பானங்களாக, மூலிகை டீயாக அருந்தலாம். பழச்சாறு, இளநீர் ஆகியவற்றையும் பருகலாம்.
தவிர்க்கவேண்டியவை
நாற்பது வயதினருக்கு இயல்பாக வரக்கூடிய நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளைத் தவிர்க்க காஃபைன் சேர்ந்துள்ள காஃபி போன்ற பானங்கள் மற்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
இருதயத்தில் அடைப்பு ஏற்படும் அபாயத்திற்குள் தள்ளும் பொரித்த உணவு, பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட உணவு ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் இரத்த அழுத்த உயர்வுக்கும், சிறுநீரக பாதிப்புக்கும் காரணமாகக்கூடும் என்பதால் அவற்றையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.
மது, ஈரலைப் பாதிக்கக்கூடும். உடலின் உள்ளே அழற்சிகள் ஏற்படக் காரணமாகும். ஆகவே, மதுவைத் தவிர்க்கவேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால் நாற்பது வயதிலும் இருபது வயது இளைஞன் போலச் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.