சமையலில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் சீரகம் என்று கூறலாம். பல்வேறு குழம்புகளில் சீரகம் சேர்க்கப்படுகிறது. சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது. குறிப்பாக வயிற்றுப் பிரச்சனைகளுக்குச் சீரகம் நல்ல தீர்வாகும்.
சீரகத் தண்ணீர்
சிறிது சீரகத்தை எடுத்து நீரில் போட்டு அதைக் கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அப்படியே ஆறவிடவேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைப் பருகி வருவது பல உடல் உபாதைகளைத் தீர்த்துவிடும்.
வயிற்று உபாதைகள்
வயிற்றில் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகள், வயிற்று உப்பிசம் ஆகியவற்றைக் குணப்படுத்துவதுடன் அஜீரண கோளாறுகளையும் சீரகம் நீக்கும். வயிற்றுவலி, அடிவயிற்றுவலி ஆகியவற்றை சுகப்படுத்தும் ஆற்றல் சீரகத்திற்கு இருக்கிறது. சீரகத் தண்ணீர், செரிமான நொதிகளை (என்சைம்) சுரக்கச் செய்வதன் மூலம் செரிமானத்தைத் தூண்டுகிறது.
கர்ப்ப கால செரிமானம்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளிலிருந்து சீரகம் நிவாரணம் அளிக்கிறது. கருத்தரித்திருக்கும் பெண்களுக்குச் செரிமானம் நன்றாக நடக்கவேண்டும். சீரகத் தண்ணீர் அதற்கு உதவி செய்து பல்வேறு தொடர் கோளாறுகளை ஏற்படுவதைத் தடுக்கிறது.
தாய்ப்பால்
சீரகத்தில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. அது பிரசவித்த தாய்மாருக்குச் சத்தினை அளிக்கிறது. தாய்ப்பால் சுரப்பைச் சீரகம் தூண்டுகிறது. இதன் மூலம் தாய், சேய் நலனுக்கு உதவுகிறது.
மாதவிடாய் வலி
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும் சக்தி சீரகத்திற்கு உள்ளது. சீரகத்திற்கு அழற்சியைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. மாதவிடாய் நாள்களில் ஏற்படும் பிடிப்பு, வலி இவற்றிலிருந்து சீரகத் தண்ணீர் நல்ல நிவாரணம் அளிக்கும்.
இரத்த சோகை
இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் இரும்புச் சத்தின் பங்கு அதிகம். சீரகத்தில் இரும்புச் சத்து இருப்பதின் காரணமாகச் சீரகத் தண்ணீர் இரத்த சோகையை நீக்குகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றல்
சீரகத்தில் இரும்புச் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. நம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் நன்றாக இருப்பதற்குச் சீரகத் தண்ணீர் உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுவதன் மூலம் அடிக்கடி வியாதிப்படுவதை தவிர்க்க முடியும்.
நீரிழிவு
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் அருந்துவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கும். சீரகம், உடலில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. ஆகவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
சுவாச கோளாறு
நெஞ்சில் சளி கட்டுவது சீரகம் தடுக்கும். தினந்தோறும் சீரகத் தண்ணீர் அருந்தி வந்தால் சுவாச பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம்
சீரகத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் நன்றாகச் செயல்படுவதற்கு பொட்டாசியம் அவசியம். சீரகம், உப்பின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கிறது.
ஈரல்
ஈரலில் சேரும் நச்சுத்தன்மையை அகற்றும் இயல்பு சீரகத்திற்கு உள்ளது. சீரகத் தண்ணீர் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியே தள்ளுவதுடன் பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக ஈரலுக்கு நன்மை செய்கிறது.