வாழைப்பழம் எளிதாக, எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது. வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று யாரும் தடுக்கமாட்டார்கள். மிகுந்த பசிவேளையில் வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லையென்றால் பசியை அடக்குவதற்கு நாம் வாழைப்பழத்தைச் சாப்பிடுகிறோம்.
வாழைப்பழத்தில் உள்ள சத்துகள்
வாழைப்பழத்தில் அநேக சத்துகள் அடங்கியுள்ளன. வாழைப்பழம் இருதய ஆரோக்கியத்துக்கு ஏற்றது. உடலின் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும்; மனச்சோர்வைக் குறைக்கும்; மலச்சிக்கலை நீக்கும்; நெஞ்சு எரிச்சல் மற்றும் குடற்புண் இவற்றைப் போக்கும். வாழைப்பழத்திலுள்ள இரும்புச் சத்து, இரத்த நிறமியான ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டுகிறது. அதன் மூலம் இரத்தசோகையை குணமாக்குகிறது.
இவற்றைத் தவிர பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் பி ஆகியவையும் வாழைப்பழத்தில் உள்ளதால், அது பசியைக் குறைத்து உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஆகவே தினமும் வாழைப்பழம் சாப்பிடவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எப்போது சாப்பிடக்கூடாது?
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடக்கூடாது என்று உணவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள். வாழைப்பழத்திலுள்ள இயற்கை சர்க்கரை உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தரும். ஆனால் சில மணி நேரத்தில் மிகுந்த களைப்பாக உணரச் செய்யும். தற்காலிகமாக வயிற்றை நிரப்பி, மந்தமான உணரச் செய்வதோடு அசதியையும் கொடுக்கக்கூடும். வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது. ஆகவே, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு கழிவதில் பிரச்சனை தோன்றக்கூடும். வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வாழைப்பழத்திலுள்ள மெக்னீசியம், இரத்தத்தில் உள்ள கால்சியம், மெக்னீசிய சத்துகளின் சமநிலையைக் குலைத்து இருதயம் தொடர்பான கோளாறுகளுக்குக் காரணமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
எப்படிச் சாப்பிடலாம்?
ஊற வைத்த உலர்திராட்சை, ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தைக் காலையில் சாப்பிடலாம் என்றும் சில உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சிலரோ பொதுவாகவே காலையில் பழங்களை மட்டும் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள். காலை உணவே பிரதானமான சத்துகள் நிறைந்ததாக இருக்கவேண்டும். ஆகவே, மற்ற உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு அதனுடன் வாழைப்பழத்தையும் சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது.