கொரோனாவை தடுக்கும் மாதுளை: ஜெர்மன் ஆய்வு தகவல்

by SAM ASIR, Nov 10, 2020, 21:05 PM IST

கொரோனா வைரஸ் இன்னும் புதிராகவே காட்சியளிக்கிறது. தொடர்ந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. SARS-CoV-2 என்றும் கோவிட்-19 என்றும் அறியப்படும் இப்புதிய வைரஸை குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகிறது. ஜெர்மனியிலுள்ள உல்ம் பல்கலைக்கழகத்தின் வைராலஜி துறையின் சார்பாக நடைபெற்ற ஆய்வு கோவிட்-19 கிருமிக்கு எதிராக மூலிகைகள், பழங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை குறித்து புதிய கண்டுபிடிப்புகளை தெரிவித்துள்ளது.

ஆய்வு

மனித உடல் செல்களில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய சாறுகள் மற்றும் தேநீர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் வைரஸ்களுடன் மூலிகைகளை கலந்து ஆய்வு செய்தனர். இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ், அடினோ வைரஸ் டைப் 5 மற்றும் கோவிட்-19 (SARS-CoV-2) வைரஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

கண்டுபிடிப்புகள்

சோக்பெர்ரி (chokeberry) என்னும் அமெரிக்காவிலுள்ள பழம் கோவிட்-19 கிருமியின் தாக்கத்தை 3000 மடங்கு குறைக்கக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதுளை சாறு, கிரீன் டீ மற்றும் எல்டர்பெர்ரி சாறு ஆகியவை கோவிட்-19 கிருமியின் செயல்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கமும் ஆய்வு செய்யப்பட்டது. பன்றி காய்ச்சலுக்குக் காரணமாகும் (swine flu) வைரஸையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மேற்கண்ட மூன்றும் பன்றி காய்ச்சல் வைரஸ் செயல்திறனை 5 நிமிடத்தில் 99 சதம் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சோக்பெர்ரி (chokeberry) 5 நிமிட நேரத்தில் SARS-CoV-2 (கோவிட்-19) வைரஸின் செயல்பாட்டை 97 சதவீதம் குறைத்தது. மாதுளை சாறு மற்றும் கிரீன் டீ ஆகியவை கோவிட்-19 வைரஸின் செயல்பாட்டை 80 சதவீதம் குறைத்தன. எல்டர்பெர்ரி சாறு, கோவிட்-19 கிருமியின் மேல் எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை. மற்ற எந்த கிருமியையும் காட்டிலும் SARS-CoV-2 (கோவிட்-19) மருந்துகளுக்கு எதிரான அதிக ஆற்றலை கொண்டது. இருந்தபோதிலும் சோக்பெர்ரி சாறு அக்கிருமிக்கு எதிராக செயல்படக்கூடியது என்பது விளங்கியுள்ளது. மாதுளை சாறும் கிரீன் டீயும் வைரஸின் தாக்கத்தை குறைப்பதில் உதவுகின்றன.

என்ன செய்யலாம்?

மாதுளை சாறு மற்றும் கிரீன் டீ கொண்டு வாய் கொப்பளித்து பின்னர் அவற்றை பருகுவதால் கோவிட்-19 கிருமியின் தாக்கத்தை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிக அபாயம் கொண்ட வயது மற்றும் உடல்நிலை கொண்டவர்களுக்கு இவை கோவிட்-19 கிருமியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.

You'r reading கொரோனாவை தடுக்கும் மாதுளை: ஜெர்மன் ஆய்வு தகவல் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை