தமிழக மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

by Nishanth, Nov 10, 2020, 21:08 PM IST

கேரள மாநிலம் வயநாட்டில் அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் கொல்லப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி கேரள அதிரடிப்படை போலீசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் (32) கொல்லப்பட்டார். கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடலில் 40க்கும் மேற்பட்ட காயங்களும் இருந்தன. மாவோயிஸ்டுகள் தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், தற்காப்புக்காகவே கேரள போலீசார் பதிலுக்கு சுட்டனர் என்றும் கேரள அரசு கூறியது.

ஆனால் அதை வேல்முருகனின் உறவினர்கள் ஏற்கவில்லை. இது கேரள போலீசாரால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் என்றும், வேல்முருகனை போலீசார் பிடித்து வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்றும் அவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் உறவினர்கள் நீதி விசாரணை கோரி வயநாடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மாஜிஸ்திரேட்டான கலெக்டருக்கு விசாரணை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜோஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை