பருவமழை, கொரோனா தொற்று இவற்றின் மத்தியிலும் இருமல், சளியை தடுக்கலாம். எப்படி தெரியுமா?

by SAM ASIR, Nov 17, 2020, 20:52 PM IST

கண்கள் வறண்டது போன்ற உணர்வு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, குமட்டல் இவை அனைத்துமே காற்றில் மாசு அதிகரித்துள்ளதின் அறிகுறிகளாகும். பருவமழை தொடங்கிவிட்ட சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் இவை பொதுவாக அதிகமாக காணப்படும். ஏற்கனவே கொரோனா பயம் இருக்கிற சூழ்நிலையில் இவை அனைத்துமே பயத்தை இன்னும் அதிகமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதன் மூலமும், சுவாச பாதையை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும் இந்தத் தொல்லைகளை தவிர்க்க முடியும்.

கரும்பு சாறு
கரும்பு பெரும்பாலும் சிரமமின்றி கிடைக்கிற ஒன்று. பல இடங்களில் கரும்பு சாறு என்ற அறிவிப்பு பலகையை பார்த்திருப்போம். ஏதாவது இரண்டு வேளை உணவுகளுக்கு இடையே அருந்துவதற்கு ஏற்றது கரும்பு சாறு. கரும்பு சாறு, மந்தமான மனநிலையை மாற்றி சுறுசுறுப்பை அளிக்கக்கூடியது. ஈரலில் தங்கியிருக்கும் நச்சுகளை அகற்றி, அதை சுத்தப்படுத்தும் தன்மை கரும்பு சாறுக்கு உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கரும்பு சாறு அதிகரிக்கும். ஒருவேளை கரும்பு சாறு அருந்த விருப்பமில்லையென்றால், கரும்பினை நறுக்கி மெல்லலாம்.

மஞ்சள் பால்
மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது. கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தம்ளர் பாலில் சேர்த்து அதை கொதிக்க வைக்கவேண்டும். பால் ஆறி வெதுவெதுப்பாகும்போது அதை அருந்தவேண்டும். பாலின் மருத்துவ குணத்தை அதிகரிக்கும் சுவையூட்டவும் கொஞ்சம் குங்குமப்பூ மற்றும் வெல்லம் சேர்க்கலாம். இருமல், சளி மற்றும் ஃப்ளூ போன்றவற்றிலிருந்து விரைவாக குணம் பெற மஞ்சள் உதவும்.

உடற்பயிற்சி
காலநிலை மோசமாக இருப்பதால் காலை நடைபயிற்சி செல்ல இயலவில்லையா? அது தவிர்க்கப்படக்கூடாது. நடக்க இயலவில்லையென்றால், வீட்டிலேயே எளிதான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். வீட்டுக்குள் அல்லது பால்கனியில் நடக்கலாம்; மாடிப்படியேறி பயிற்சி செய்யலாம்.

நீர்
போதுமான தண்ணீர் அருந்தினால் நோய்கள் பெரும்பாலும் வருவதில்லை. தண்ணீருக்கு உடலிலுள்ள நச்சுபொருள்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு. ஏதாவது நோயின் பிடியில் இருந்தால் விரைவாக மீள்வதற்கு அது உதவும். ஆகவே, தினமும் போதுமான அளவு நீர் அருந்தவும்.

நெய்
மூக்கின் வழியாக மாசு உள்ளே செல்வதை தடுக்க எளிய வழி, மூக்கு துவாரங்களில் ஒரு சொட்டு சுத்தமான நெய்யை விடுவதுதான். காலையும் இரவு படுக்கும்போதும் மூக்கு துவாரங்களில் ஒரு சொட்டு நெய் விடவும். தினமும் சாப்பாட்டில் இரண்டு முதல் மூன்று மேசைக்கரண்டி நெய் சேர்ப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும். பாதரசம் மற்றும் காரீயம் போன்ற உலோக மாசுகள் எலும்பு, ஈரல் மற்றும் சிறுநீரகங்களில் படிந்து ஆபத்தை விளைப்பதை நெய் தடுக்கிறது.

வெல்லம்
இரும்பு சத்து அதிகம் உள்ள பொருள்களில் ஒன்று வெல்லம். வெல்லம், இரத்த நிறமியான ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கிறது. ஆகவே, இரத்தத்தினால் அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. காற்று மாசடைந்திருந்தாலும் அது நம்மை பாதிக்காமல் வெல்லம் தடுக்கிறது.

பீட்டா கரோட்டின்
தாவரத்திலுள்ள நிறமிப் பொருள் பீட்டா கரோட்டின். இதை நம் உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், பூசணி, பசலைக் கீரை போன்றவற்றை சாப்பிட்டால் காற்று மாசினால் அழற்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

You'r reading பருவமழை, கொரோனா தொற்று இவற்றின் மத்தியிலும் இருமல், சளியை தடுக்கலாம். எப்படி தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை