டெங்கு காய்ச்சலிலிருந்து சுகம்... சரும பொலிவு... அதிகரிக்கும் செரிமானம்... வீட்டுக் கொல்லைப்புற அதிசயம்...

by SAM ASIR, Jan 4, 2021, 20:21 PM IST

பப்பாளியின் தாவரவியல் பெயர் காரிகா பப்பாயா என்பதாகும். இது மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியை பூர்வீகமாக கொண்டது. தற்போது உலக அளவில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படும் தாவரங்களுள் ஒன்றாக பப்பாளி விளங்கிவருகிறது. பப்பாளி பழம், அதன் விதை, இலைகள் ஆகியவை சமையலுக்கும், பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன. பப்பாளி இலைகளில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.

டெங்கு
கொசுவினால் உருவாகக்கூடிய டெங்கு பாதிப்பு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது. காய்ச்சல், அசதி, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் தோலில் அக்கி போன்ற அழற்சி ஆகியவை டெங்கு பாதிப்பின் அறிகுறிகளாகும். டெங்கு பாதிப்பு தீவிரமானால் இரத்தத்தில் இரத்த வட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். இரத்த வட்டணு குறைந்தால், இரத்தப்போக்கு ஏற்படக்கூடிய அபாயம் உண்டு. சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டல் உயிருக்கு ஆபத்து நேரிடக்கூடும். தற்போது வரை டெங்கு பாதிப்பானது குணமாக்க முடியாததாகவே உள்ளது. ஆனால், பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. அதில் ஒன்று பப்பாளி இலையை கொண்டு செய்யப்படுவதாகும். பப்பாளி இலைச்சாற்றினை பருகும் டெங்கு நோயாளிகளுக்கு இரத்தத்தில் வட்டணுக்களின் எண்ணிக்கை உயர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு
மெக்ஸிகோவின் நாட்டுப்புற மருத்துவத்தில் நீரிழிவை கட்டுப்படுத்த பப்பாளி இலை பயன்படுத்தப்படுகிறது. பப்பாளியில் இரத்த சர்க்கரை அளவை மட்டுப்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) உள்ளன. கணையத்தில் இன்சுலினை உருவாக்கக்கூடிய செல்கள் சேதமுறாமலும், விரைவில் மடிந்துபோகாமலும் பப்பாளி இலை பாதுகாக்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமச்சீராக பராமரிக்கப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடந்துவருகிறது.

ஜீரணம்
வாய்வு தொல்லை, வயிற்று உப்பிசம் மற்றும் நெஞ்செரிச்சல் இவற்றை குணப்படுத்த பப்பாளி சாறு பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதில் பாபெய்ன் என்ற கூட்டுப்பொருளும் உள்ளது. இந்தக் கூட்டுப்பொருள் தனித்துவம் மிக்கது. நார்ச்சத்தும், பாபெய்னும் ஜீரணத்தை துரிதப்படுத்துகின்றன. பாபெய்ன் உணவிலுள்ள புரதத்தை உடைத்து செரிப்பதற்கு ஏற்றபடி சிறு புரதமாகவும், அமினோ அமிலங்களாகவும் உடைக்கிறது. இறைச்சிக்கு இளக்கம் கொடுக்கவும் பப்பாளி இலைச்சாறு சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

கூந்தல் வளம்
சில ஆராய்ச்சிகள், ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் என்னும் பாதிப்பின் காரணமாக கூந்தல் உதிரக்கூடும் என்று கூறுகின்றன. ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிகமுள்ள உணவு பொருள்களை சாப்பிடுவதால், ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் குறைந்து அதன் காரணமாக கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகிறது. பப்பாளி இலையில் ஃப்ளவோனாய்டு போன்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளும் வைட்டமின் இ சத்தும் உள்ளன. பப்பாளி இலை தலையின் மேலுள்ள தோலுக்கு ஆரோக்கியமளிக்கிறது.

சரும நலம்
பப்பாளி இலையிலுள்ள பாபெய்ன் என்பது புரதத்தில் கரையக்கூடிய நொதி (என்சைம்) ஆகும். இது சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு புது பொலிவை அளிக்கக்கூடியது.

பப்பாளி இலைச்சாறு பக்கவிளைவுகள் அற்றது. ஆனாலும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு நாளைக்கு 30 மில்லி லிட்டர் சாற்றினை மூன்று வேளை மட்டும் பருகலாம் என்று கூறப்படுகிறது.

You'r reading டெங்கு காய்ச்சலிலிருந்து சுகம்... சரும பொலிவு... அதிகரிக்கும் செரிமானம்... வீட்டுக் கொல்லைப்புற அதிசயம்... Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை