வழக்கத்திற்கு மாறாக திடீரென உடல் எடை கூடும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மறைவான உடல் ஆரோக்கிய கேடுகளும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம். பொதுவாக உணவு ஒழுக்கத்தை மாற்றுதல், உடற்பயிற்சி குறைவு, அசையாமல் உட்கார்ந்தே நேரத்தை ஓட்டுவது, ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல காரணங்களால் உடல் எடை கூடலாம்.
தைராய்டு
தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தால் (hypothyroidism) தைராய்டை தூண்டக்கூடிய டிஎஸ்எச் என்ற வகை ஹார்மோன்கள் சுரப்பது கடினமாகிவிடும். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கக்கூடியவை. ஆகவே அந்த ஹார்மோன்கள் சுரப்பது குறைவதால் உடல் எடை அதிகமாகிவிடும். வயது மற்றும் பாலினம் ஆகியவையும் தைராய்டு செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்டீராய்டு
முடக்குவாதம் (ஆர்த்ரைடிஸ்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஊக்கமருந்து (ஸ்டீராய்டு) அடங்கிய சிகிச்சை அளிக்கப்படும். இது பசியைத் தூண்டி, அதிகமாக சாப்பிடும்படி செய்கிறது. பசி அதிகமாவதால், காரணம் தெரியாத வண்ணம் உடல் எடை அதிகரிக்கிறது.
சினைப்பை கட்டி (பிடிஓஎஸ்)
உலகம் முழுவதுமுள்ள பெண்களில் ஐந்து பேரில் ஒருவர் கருத்தரிப்பு பிரச்னையான பிசிஓஎஸ் (சினைப்பை நீர்க்கட்டி) என்ற குறைபாட்டால் பாதிப்புறுகின்றனர். இது ஹார்மோன் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடு, அதிகமான அழற்சி, கட்டுப்பாடற்ற பிஎம்ஐ என்னும் உடல் நிறை குறியீடு ஆகியவற்றால் உண்டாவதாக கருதப்படுகிறது. பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் ஆகிய பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு உடல் எடை குறையும் விளைவும் உண்டாகலாம்.
மனச்சோர்வு
மனச்சோர்வு மற்றும் அழுத்தம் ஆகியவை உடல் மற்றும் மன நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மனக்கலக்கம் இருப்பவர்களுக்கு பசி அதிகரிக்கக்கூடும். அதிகமாகச் சாப்பிட்டு, குறைவாக உழைப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மனச்சோர்வினிமித்தமான உடல் எடை கூடும் பிரச்சனை அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தூக்கமின்மை
உடல் எடை கூடுவதற்குத் தூக்கம் ஒரு காரணமா? ஆம்! சரியாக உறங்காதவர்களுக்கு உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதிகமாகச் சாப்பிடுவோர், அதிக மனஅழுத்தம் கொண்டோர் ஆகியோருக்கு உறக்கமும் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே உடல் எடை அதிகரிக்கக்கூடும். அதிகமாகக் களைப்பாக உணருவோருக்கும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
சிறுநீரக கோளாறு
சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு இருந்தால் உடலில் அதிகப்படியான திரவம் தங்கும். இது உடலில் நச்சு சேருவதற்கு வழிவகுக்கும். இவற்றின் பலனாக உடல் எடை அதிகரிக்கும். உடலிலிருந்து திரவம் சரியாக வெளியேறாமை, வீக்கம் போன்றவை சிறுநீரக கோளாறுக்கு அறிகுறிகளாகும்.
இவற்றுள் எவற்றால் உடல் எடை அதிகரிக்கிறது என்று கண்டறிந்து அதற்கான தீர்வுகளைச் செயல்படுத்தினால் எடை குறைந்து 'சிக்'கென்ற உடல்வாகு பெறலாம்.