நம் உடலுக்குத் தேவையான பெருஊட்டச்சத்துகள் மூன்று. அவை புரதம் (புரோட்டீன்), கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவையே உடலுக்குத் தேவையான ஆற்றலை (கலோரி) தருகின்றன. இதில் புரதம், நம் உடலின் திசுக்களை கட்டமைக்க உதவுகிறது. நம் உடலின் கூந்தல், நகங்கள், எலும்புகள், தசைகளை இவற்றை புரதம் உருவாக்குகிறது. மனித உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் புரதம் காணப்படுகிறது. நம் உடல் சேதமடைந்த செல்களை சரிசெய்து கொள்வதற்கும் புதிய செல்களை உருவாக்குவதற்கும் புரதம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அவசியம். இளைஞர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு புரதம் குறைவின்றி கிடைக்கவேண்டும். புரதம் அதிகமாக இருக்கக்கூடிய தாவர உணவுகளை எவையென்று பார்ப்போம்.
உருளைக்கிழங்கு
சமைத்த உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்தால் அதில் மூன்று கிராம் புரோட்டீன் இருக்கும். புரோட்டீன் தவிர பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆகியவையும் உருளைக்கிழங்கில் காணப்படுகிறது.
பிரெக்கொலி
ஒரு கப் பிரெக்கொலி எடுத்தால் அதில் மூன்று கிராம் புரதமும், இரண்டு கிராம் நார்ச்சத்தும் இருக்கும். வயிற்றை ஆரோக்கியமாக காப்பதற்கு பிரெக்கொலி உதவுகிறது.
காலிஃபிளவர்
நம் உடலில் எரிசக்தியை (கலோரி) அதிகரிக்காமல் புரதத்தை கூட்டுவதற்கு காலிஃபிளவர் உதவுகிறது. 100 கிராம் காலிஃபிளவரில் 25 கிராம் புரதம் இருக்கும். மேலும் பொட்டாசியம், கால்சியம் (சுண்ணாம்பு சத்து), மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்து ஆகியவையும் காலிஃபிளவரில் உண்டு.
காளான்
100 கிராம் சமைத்த காளானில் 4 கிராம் புரதம் இருக்கும். காளான் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் புரதம், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி சத்துகள் அதிகம். 100 கிராம் பசலைக் கீரையில் 2.9 கிராம் புரதம் உள்ளது.
மக்கா சோளம்
ஸ்வீட் கார்ன் எனப்படும் சோளம் 100 கிராம் சாப்பிட்டால் அதில் 3.2 கிராம் புரதம் உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம்.
பச்சை பட்டாணி
அரை கப் பச்சை பட்டாணி எடுத்தால் அதில் 4 கிராம் புரதம் உண்டு. பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.