நம் உடலுக்குத் தேவையான மிகவும் முக்கியமான சத்து மெக்னீசியம் ஆகும். ஒருவரின் உடலில் 25 கிராம் மெக்னீசியம் இருக்கும். இதில் 50 முதல் 60 சதவீதம் சத்து எலும்புகளில் உள்ளது. மீதி மெக்னீசியம் மென் திசுக்களில் உள்ளது. நம் உடலில் நூற்றுக்கணக்கான வேதி வினைகள் நடக்கின்றன. இவற்றுக்கு மெக்னீசியம் அவசியம். உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இது தேவை.ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் மெக்னீசியம் சத்து ஒருவரது உடலில் சேர வேண்டும். பல உணவுப் பொருள்களில் மெக்னீசியம் உள்ளது. ஆகவே, இச்சத்து எளிதாக உடலில் சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மெக்னீசியம் சத்து அடங்கிய உணவுப் பொருள்கள்:
அவகாடோ
அவகாடோவில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. ஒரு அவகாடோவில் 58 மில்லி கிராம் மெக்னீசியம் உள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான மெக்னீசியத்தின் அளவில் 15 சதவீதமாகும். அவகாடோவில் பொட்டாசியம், வைட்டமின்கன் பி மற்றும் கே ஆகியவை உள்ளன. அவகாடோவில் நார்ச்சத்தும் உள்ளது. அவகாடோ சாப்பிட்டால் உடலில் அழற்சி ஏற்படாது. கொலஸ்ட்ராலின் அளவும் சீராகப் பராமரிக்கப்படும்.
நட்ஸ்
நட்ஸ் என்னும் கொட்டை வகை உணவுப் பொருள்கள் ஆரோக்கியமானவை. உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு இதுவாகும். முந்திரி பருப்பு மற்றும் பிரஸில் நட்ஸ் என்னும் வகையில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. 28 கிராம் முந்திரியில் 82 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கும். இது ஒரு நாளைக்குத் தேவைப்படும் மெக்னீசியத்தின் அளவில் 20 சதவீதமாகும்.
பயிறு வகைகள்
தினமும் ஏதாவது ஒரு பயிரைச் சாப்பிடுவது நல்லது. பீன்ஸ் வகைகள், கொண்டை கடலை, சோயாபீன்ஸ் போன்றவற்றில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. பயிறு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றின் கிளைசமிக் குறியீடு மிகவும் குறைவு. அதாவது இவற்றைச் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு உடனே கூடாது. கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடியவை. பயிறு வகைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிப்பதால் இதய நோய் வரும் அபாயம் குறையும்.
விதைகள்
பூசணி விதைகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதை வகைகளில் மெக்னீசியம் அதிகம். 28 கிராம் விதைகளில் 150 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கிறது. இது தினமும் ஒருவருக்குத் தேவைப்படும் அளவில் 37 சதவீதமாகும். இந்த விதைகளில் இரும்புச் சத்து மற்றும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) தூண்டும். ஆளி விதைகள் (ஃபிளக்ஸ்ஸீட்ஸ்) கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம். இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாகக் காக்கிறது. இவற்றில் மெக்னீசியம் சத்து அதிகம். ஒரு பெரிய வாழைப்பழத்தில் 37 மில்லி கிராம் மெக்னீசியம் உள்ளது. இது ஒரு நாளில் தேவைப்படும் மெக்னீசியத்தின் அளவில் 9 சதவீதமாகும். மேலும் வைட்டமின்கள் சி, பி6, நார்ச்சத்து ஆகியவையும் இதில் உள்ளன. நன்கு பழுத்த வாழைப்பழத்தில் அதிக சர்க்கரையும், கார்ப்போஹைட்ரேடும் இருப்பதால் சர்க்கரை நோயுள்ளவர்கள் மட்டும் தவிர்க்கலாம். இது வயிற்றுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறது.