இங்கிலாந்து கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரசால் உலகுக்கு பெரும் ஆபத்து

by Nishanth, Feb 11, 2021, 20:45 PM IST

இங்கிலாந்தில் உள்ள கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசால் உலகுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று இங்கிலாந்து மரபணு கண்காணிப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரை 23.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் ஏற்பட்ட பீதி இன்னும் அடங்காத நிலையில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பரவி உள்ள கொரோனா வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த பரவியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கென்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் உலகுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என இங்கிலாந்து மரபணு கண்காணிப்புத் திட்டத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த துறையின் இயக்குனர் ஷாரன் பீகாக் கூறியது: தற்போது இங்கிலாந்து முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி விட்டது. கென்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வைரசால் உலகம் முழுவதும் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட இந்த வைரஸ் முறியடித்து விடும். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த வைரசை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் வழங்க வேண்டி வரும். இந்த பூஸ்டர் டோஸ்களுக்கு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வைரசை ஓரளவு கட்டுப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனாலும் இது தொடர்பாக உறுதியாக எதையும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading இங்கிலாந்து கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரசால் உலகுக்கு பெரும் ஆபத்து Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை