தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகச் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நந்தனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையும் அதன் அருகே உள்ள பெரியார் மாளிகையையும் இணைத்து பாலத்துடன் புதிய கட்டடங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர்களில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளரான பூச்சி எஸ்.முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்கத்திலும் அவர் புகார் கொடுத்திருந்தார். மேலும் இந்த டெண்டரை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் பூச்சி முருகன் சார்பில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.இந்த டெண்டர்கள் குறித்து ஜனவரி 12-ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியானது. ஆனால் மறுநாளே அந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டது.
இதுகுறித்து பூச்சி எஸ்.முருகன் கூறுகையில் அரசு பின்வாங்கியதில் இருந்தே இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. எடப்பாடி அரசுக்கு இது கடைசிக் கட்டம் என்பதால் பல டெண்டர்களை அவசரம் அவசரமாக அறிவித்து மேல்மட்டத்தில் இருப்பவர்களின் உறவினர்களின் நிறுவனங்கள் பயன்பெற வழிவகை செய்யப்படுகிறது. இந்த டெண்டர் ரத்து என்பது தி.மு.கவின் சட்ட போராட்டத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்றார்.