எளிதில் கண்டுபிடித்து சரியாக்கக்கூடிய ஒரு சத்துக்குறைவினை கவனிக்காமல் விட்டால் இதய வீக்கம், இதய செயலிழப்பு போன்ற மோசமான பாதிப்புகளை கொண்டு வந்துவிடும். சில அறிகுறிகள் தென்படும்போது அவற்றை அலட்சியம் செய்யாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.
அனீமியா
உலகம் முழுவதும் பரவலாக காணப்படக்கூடிய சத்துக்குறைவு இரும்பு சத்து குறைபாடாகும். இதை இரத்தசோகை அல்லது அனீமியா என்று கூறுகிறோம். நம் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பது ஹீமோகுளோபின் ஆகும். இது புரத்தத்தின் ஒரு வகை. இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜன் என்னும் உயிர்வளியை எடுத்துச் செல்கிறது. நம் உடலில் இரும்புச் சத்து குறைவுபடும்போது, ஹீமோகுளோபின் உற்பத்தியும் பாதிக்கப்படும். ஆண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒருநாளைக்கு 8.7 மில்லிகிராம் இரும்புச் சத்தும், 19 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு 14.8 மில்லிகிராம் இரும்புச் சத்தும் தேவை.
விளைவுகள்
மாதவிடாய் காலத்திலும் கர்ப்பகாலத்திலும் பெண்களுக்கு இரத்தசோகை ஏற்படக்கூடும். இரத்த இழப்பின் காரணமாக இது பொதுவாக காணப்படுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, வயதான பெண்களுக்கும் இரத்தசோகை ஏற்படக்கூடும். இரத்தசோகைக்கு உரிய காலத்தில் சிகிச்சை பெறாவிட்டால், உள் உறுப்புகளில் இரத்தக்கசிவு, இதயம் பெரிதாகுதல் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படக்கூடும். இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்தால், எளிய சிகிச்சை முறைகளில் குணப்படுத்தலாம்.
அசதி
இரும்புச் சத்து குறைவாக இருப்பதன் முதல் அறிகுறி உடல் அசதியாகும். இரும்புச் சத்து குறைவாக இருப்பதினால் போதுமான ஹீமோகுளோபின் உற்பத்தியாகாது. ஹீமோகுளோபின் குறைவின் காரணமாக போதுமான அளவு ஆக்ஸிஜன் உடலின் திசுக்கள் மற்றும் தசைகளுக்குச் சென்று சேராது. அதன் காரணமாக உடலில் அசதி ஏற்படும். மேலும் போதுமான ஆக்ஸிஜன் சென்று சேரவேண்டும் என்று இதயம் அதிகமாக வேலை செய்யும். இதயத்தின் அளவுக்கு அதிகமான பணியும் உடலை அசதியாக்குகிறது.
வெளிறுதல்
ஹீமோகுளோபின் இரத்தத்திற்கு நிறத்தை அளிக்கிறது. இரத்தம் சிவப்பு நிறமாக இருந்தால் நம்முடைய தோலும் ஆரோக்கியமாக காணப்படும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பின் சருமம் வெளிறியிருக்கும். இரும்புச் சத்து குறைவின் காரணமாக ஹீமோகுளோபின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் முகம், ஈறுகள், உதடுகள், கண்ணிமைகளின் உள்பகுதி, நகங்கள் ஆகியவை வெளிறி காணப்படும்.
மூச்சுத்திணறல்
ஹீமோகுளோபினே இரத்த சிவப்பு அணுக்கள் உடலின் திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. இரும்புச் சத்து குறையும்போது உடலால் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை அளிக்க இயலாது. திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லையென்றால் நடக்கும்போது அசதி ஏற்படும்; வேறு எந்த வேலையையும் செய்வதும் சிரமமாகிவிடும்.
இதய படபடப்பு
இதய படபடப்பு, இரும்புச் சத்து குறைவின் அறிகுறியாகும். ஹீமோகுளோபின் குறைந்தால் உடலின் திசுக்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் செல்லாது. ஆகவே, போதுமான ஆக்ஸிஜனை அளிப்பதற்காக இதயம் அதிகமாக வேலை செய்யும். அப்போது இதய துடிப்பு சீராக இருக்காது. இதற்குச் சிகிச்சையளிக்காவிட்டால் இதயம் வீங்கும்; இதயம் செயலிழக்கும்.
சருமத்தில் வறட்சி, கூந்தல் பாதிப்படைதல், நகங்கள் உடைதல் ஆகியவை இரும்புச் சத்து குறைந்துள்ளதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இரும்பு சத்துள்ள உணவுகள்
கம்பம்புல், கேழ்வரகு, அவல், முளைகட்டிய கோதுமை, வறுத்த கடலை, வறுத்த பட்டாணி, கோயாபீன்ஸ், காராமணி, பீன்ஸ், வெங்காயத்தாள், வாழைக்காய், சுண்டைக்காய், காலிஃபிளவர், மணத்தக்காளி, முள்ளங்கிக் கீரை, பசலைக்கீரை, முட்டை, ஆட்டு ஈரல், சிறுமீன்கள், பாதாம், முந்திரி, கொப்பரைத் தேங்காய், தர்பூசணி விதை, நெல்லிக்காய், பேரீச்சை, கொய்யா, கொடுக்காப்புளி, அன்னாசி, மாதுளை, உலர்திராட்சை, சீத்தாப்பழம், காரட், கருணைக்கிழங்கு, வெல்லம், ஜவ்வரிசி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகமுள்ளதால் அவற்றை சாப்பிட்டு பயனடையலாம்.