பாஜக ஆட்சியை விமர்சித்த மாணவி சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் போலீசுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டார். அவரின் இந்த கோஷம் பெரிய அளவில் வைரல் ஆனது. அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆனது. இதனால் தமிழிசை அவருக்கு எதிராக புகார் அளித்தார்.
பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்களை தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.
முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.
தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுநாள் காலை அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழிசைக்கு எதிராக சோபியாவும் அவரது தந்தையும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தனர். அதேபோல் வழக்கு தொடுத்ததற்கு எதிராகவும் புகார் அளித்தனர். ஆனால் தமிழிசை மீது போலீஸ் எந்த விதமான நடவடிக்கையும் அப்போது எடுக்கவில்லை.
இதனால் சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். காவல் துறைக்கு எதிராகவும், தமிழிசைக்கு எதிராகவும் புகார் அளித்தார். இதில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், விசாரணையின் போது சோபியாவும் உடன் இருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இன்று மூவரையும் மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. ஆணைய உறுப்பினரான நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது. திருநெல்வேலியில் உள்ள ஆய்வு மாளிகையில் இந்த விசாரணை நடந்தது. போலீஸ் நடந்து கொண்ட விதம் குறித்தும், தமிழிசை சௌந்தரராஜன் நடந்து கொண்ட விதம் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.