தேர்தலை எதிர்கொள்ள மாற்றம்: மேற்கு வங்க காங்கிரஸூக்கு புதிய தலைவர்

by SAM ASIR, Sep 24, 2018, 15:12 PM IST

2019 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாற்றங்களை அறிவித்துள்ளார்.

கட்சியின் மேற்கு வங்காள மாநில தலைவராக சோமேந்திர நாத் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மாநில தலைவராக இருந்த அதிர் ரஞ்சன் சௌத்ரி, கட்சியின் மாநில பரப்புரை குழு தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு 1992 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் மித்ரா, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் 1997ம் ஆண்டு, மம்தா பானர்ஜி, காங்கிரஸிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரஸை ஆரம்பித்தார். 2008ம் ஆண்டு சோமேந்திர நாத் மித்ரா, புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி திரிணமுல் காங்கிரஸூடன் இணைந்தது. மித்ரா, 2014ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

அதிர் ரஞ்சன் சௌத்ரி, 1999ம் ஆண்டிலிருந்து பெஹ்ராம்பூர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வென்று வந்துள்ளார். ரயில்வே துறையின் இணையமைச்சராக முன்பு பதவி வகித்துள்ளார். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்க மாநில காங்கிரஸூக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து விலகிய சோமேந்திர நாத் மித்ராவை மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்ததில் சௌத்ரி முக்கிய பங்கு வகித்தார்.

சங்கர் மலாகர், நேபாள் மஹதோ, அபு ஹாசேம் கான் சௌத்ரி, தீபா தாஸ்முன்ஷி ஆகியோரை மேற்கு வங்க காங்கிரஸின் செயல் தலைவர்களாக ராகுல் காந்தி நியமித்துள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக பிரதீப் பட்டாச்சார்யாவும், கொள்கை பரப்பு குழு தலைவராக அபிஜித் முகர்ஜியும், தொடர்பு குழு தலைவராக அமிதபா சக்ரபோர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading தேர்தலை எதிர்கொள்ள மாற்றம்: மேற்கு வங்க காங்கிரஸூக்கு புதிய தலைவர் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை