ஈரோடு மாவட்டம் நம்பியூர் இரு தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நம்பியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின.
தொடர்ந்து மழை பெய்ததால், வெள்ள நீர் நம்பியூர் கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இடுப்பளவிற்கு தண்ணீர் நின்றதால், பாதிக்கப்பட்ட மக்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சமூதாய நலக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் அடித்து செல்லப்பட்டதால், உணவின்றி தவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரு தினங்களாக குழந்தைகளை வைத்து அல்லப்படுவதாக கவலை தெரிவித்த மக்கள், இதுவரை அதிகாரிகள் யாரும் பார்வையிட வரவில்லை.
உடனடியாக தண்ணீர் வெளியேற வழி வகை செய்யவதோடு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நம்பியூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.