சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்

Advertisement

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 2 ஆண்டுகளாக 14 வயது சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டமலை குள்ளப்பநகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர்.

மனநலம் பாதித்த மனைவி, 14 வயது மகள், 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். 6 ஆம் வகுப்பிற்கு பின் பள்ளிக்கு செல்லாத சிறுமி சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.

தாய் வீட்டிற்கு வந்தபோது உடல்நிலை சரியில்லாதது குறித்து தங்கையிடம், மூத்த சகோதரி விசாரித்துள்ளார். அப்போது, சிறுமி, தன்னை 2 ஆண்டுகளாக உனது கணவரும், மற்ற சிலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து கீழே சாய்ந்துள்ளார் சிறுமியின் சகோதரி.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பில் மூத்த சகோதரி புகார் அளித்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ், வட்டமலை அருகே உள்ள எம்ஜிஆர் நகர் சுந்தரம் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன், பன்னீர், குமார், வடிவேல், மூர்த்தி, நாய் சேகர், கோபி, அபிமன்னன், சரவணன், சங்கர், முருகேசன் ஆகிய 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் 11 பேரை கைது செய்த காவல்துறை, தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.

Advertisement
/body>