திமுக பொருளாளர் துரைமுருகனின் தாலி-கூட்டணி உறவு பற்றிய பேச்சால், கொந்தளிப்பில் உறுமிக் கொண்டிருக்கிறது சிறுத்தைகள் கூடாரம். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பும் வெளியாகாமல் இருப்பதால் விசிக பொறுப்பாளர்களின் ஆதங்கம் தீர்ந்தபாடில்லை.
' ஒரு சீட்டைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் கவிழ்க்கவும் திமுகவினர் தயாராக இருப்பார்கள். பாமக இருக்கும் அணியில் நாம் நிச்சயமாக அங்கம் வகிக்கப் போவதில்லை. எனவே தினகரனை ஒரு சாய்ஸாக எடுத்துக் கொள்ளலாம்' என்ற முடிவில் திருமாவளவன் இருக்கிறாராம்.
இதற்காக 6 சீட்டுகள் வரையில் பேசியுள்ளனர். திமுக கூட்டணியில் ஓர் இடத்துக்காகப் போராடுகிறவர்கள், தன்னிடம் 6 சீட்டுகளை எதிர்பார்ப்பதை தினகரன் விரும்பவில்லை. ' திமுகவைவிடவும் நாம் வலுவாக இருக்கிறோம். பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை.
மோடிக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் அமமுகவுக்குத்தான் வரப் போகிறது. 6 சீட்டுகளைக் கொடுக்கும் அளவுக்கு நாம் இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம். இந்த வாக்கு சதவீதம், சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படும்' என தினகரன் திட்டம் போடுகிறாராம்.