தமக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுகிறார். மாநில அரசின் நலத்திட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஆளுநர் சரியான முடிவு எடுக்கும் வரை தர்ணா தொடரும் எனவும், மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் நாராயணசாமி கூறியிருந்தார்.
இதனால் டெல்லியிலிருந்து வரும் 21-ந் தேதி தான் திரும்ப திட்டமிட்டிருந்த கிரண்பேடி அவசரமாக புதுச்சேரிக்கு விரைந்தார்.
தொடர்ந்து முதல்வர் நாராயணசாமியை பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநர் மாளிகையில் தம்மை சந்திக்க மாலை 6 மணிக்கு நேரமும் ஒதுக்கியுள்ள கிரண்பேடி, சட்டத்தில் தமக்குள்ள அதிகார வரம்புக்குள் தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதல்வர் நாராயணசாமியின் 5 நாள் தர்ணா போராட்டம் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே 5-வது நாளாக போராட்டத்தை தொடரும் நாராயணசாமியை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.