மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே அக் கட்சியினர் நினைத்திருந்தனர். ரஜினியின் சமீபத்திய பேச்சுக்களும் மோடிக்கு ஆதரவாகவே இருந்தது. இந்நிலையில் திடீரென ரஜினியின் இன்றைய அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம் என்றே தெரிகிறது.
ஆனால் ரஜினியின் அறிவிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், ரஜினியின் நிலைப்பாடு சரியானதுதான். ரஜினியின் கருத்தை நேர்மறையான கருத்தாகவே எடுத்துக் கொள்கிறோம். அதனால் அவருடைய அறிவிப்பு பாஜகவுக்கு எதிரானது அல்ல.
மத்தியில் வலுவான ஆட்சி செய்வது யார்? தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்தது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.