அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வராமல் இருப்பதே நல்லது என்ற மனநிலையில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். கடந்த காலங்களில் பாமக மீது விஜயகாந்த் காட்டிய கடும் பகைதான் காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
வடமாவட்டங்களில் பாமக வாக்குகளை விஜயகாந்த் பிரித்ததால், சினிமா நடிகர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார் ராமதாஸ். இருப்பினும் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இணைந்தன.
அன்புமணிக்காக தருமபுரியில் வாக்கு கேட்கச் சென்றார் விஜயகாந்த். ஆனால் தேமுதிக வேட்பாளர்களுக்காக ராமதாஸ் எந்த மேடையிலும் தலைகாட்டவில்லை.
இதனால் போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் தேமுதிக வெற்றி பெறவில்லை. வன்னிய வாக்குகளும் தேமுதிக பக்கம் இடம் பெயரவில்லை.
திட்டமிட்டே ராமதாஸ் சதி செய்துவிட்டார் என தேமுதிக தரப்பில் கொதித்தனர்.
இதற்குப் பின்னணியில் அடிப்படையான காரணம் ஒன்றும் இருக்கிறது.
தன்னுடைய மகள் திருமண விழாவுக்காக விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றார் அன்புமணி. இதற்காக விஜயகாந்தின் உதவியாளரிடம் அப்பாயிண்மென்ட் வாங்கிவிட்டுத்தான் ஜிகே.மணியை உடன் அழைத்துக் கொண்டு சென்றார்.
பல மணி நேரம் காத்திருந்தும், இவர்கள் இருவரையும் சந்திக்க விஜயகாந்த் வரவில்லை. ' நான் ஊரில் இல்லை எனச் சொல்லிவிடு. அவர்கள் கொடுக்கும் அழைப்பிதழை நீயே வாங்கிக் கொள்' என உதவியாளரிடம் கூறியிருக்கிறார் விஜயகாந்த்.
இந்தச் செயலால் கடும் கோபத்தில் இருந்தார் அன்புமணி. அந்தக் கோபத்தை எல்லாம் காட்டும் வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவைத் தனிமைப்படுத்தும் வேலைகளையும் செய்துள்ளனர்.
அதிமுக, தேமுதிக கூட்டணி உருவாகாமல் தள்ளிப் போகும் பின்னணி இதுதான் என்கிறார்கள் அதிமுக தரப்பில்.
-அருள் திலீபன்