40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வேலையைத் தொடங்கிவிட்டது தே.மு.தி.க. ' தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?' என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த பிரேமலதா, எங்களுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும்.
விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இந்தத் தேர்தலில் 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை' என்றார்.
பிஜேபியுடன் சுதீஷ் கூட்டணிப் பேச்சு நடத்தி வரும் நிலையில், திமுக பாசத்தில் பிரேமலதா பேசுவதைக் கவனிக்கும் தேமுதிக பொறுப்பாளர்கள்,
' இந்தத் தேர்தலின் மூலம் விஜய பிரபாகரனை முன்வரிசைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் பிரேமலதா.
பாமக எதிர்ப்பால்தான் விருத்தாசலத்தில் முதல் வெற்றியைத் தொடங்கினார் விஜயகாந்த். வடமாவட்டங்களில் தேமுதிக வளர்ந்ததற்கு முக்கியக் காரணம், பாமக எதிர்ப்பு தான்.
2009, 2011 தேர்தல்களில் பாமகவின் தோல்விகளுக்கும் விஜயகாந்த் காரணமாக இருந்தார். இப்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால், திமுக கூட்டணியில் இணைவதையே பிரேமலதா விரும்புகிறார்.
இதைப் பற்றி எங்களிடம் பேசிய பிரேமலதா, 'கூட்டணியாக நின்று பாமகவைத் தோற்கடித்துவிட்டால், பழைய இடத்துக்கு நாம் வந்துவிடலாம். இப்போது பாமக வாங்கியுள்ள 7 பிளஸ் 1 என்பது நமக்கான இடம். அதை அவர்கள் வாங்கிக் கொண்டார்.
இந்த 7 பிளஸ் 1ஐ வீழ்த்தினால் தான் நமக்கு எதிர்காலம். குறைந்த சீட்டுக்கு ஒப்புக் கொண்டால், நாம் சிறிய கட்சி என்பது முடிவாகிவிடும். விஜய பிரபாகரனுக்கு எதிர்காலம் வேண்டும் என்றால், பாமக கூட்டணியில் நாம் இல்லாமல் இருப்பதே நல்லது' எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் ராஜ்யசபா சீட், தொகுதி செலவு ஆகியவற்றைக் கணக்குப் போட்டு அதிமுக அணியில் அங்கம் வகிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் சுதீஷ்.
அருள் திலீபன்