தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்யசபா எம்.பி. கனிமொழி லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடி தொகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் தூத்துக்குடி தொகுதியில் கிராம சபை கூட்டங்களில் கனிமொழி பங்கேற்றார். மருத்துவ முகாம்களையும் அங்கு கனிமொழி நடத்தினார்.
மேலும் கனிமொழிக்கு பதிலாக ஜோயலை ஸ்டாலின் நிறுத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ஜோயல் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் லோக்சபா தொகுதியில் தாம் போட்டியிடுவது உறுதி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகா அல்லது நடிகர் சரத்குமாரை நிறுத்த அதிமுக தீவிரமாக முயற்சித்தது. இந்த நிலையில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடலாம் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில், தமிழக தேர்தல் களத்தில் விஐபிக்களை எதிர்த்து விஐபிக்கள் போட்டியிட்டது இல்லை. அதையும் மீறி என்னை கனிமொழிக்கு எதிராக போட்டியிட சொன்னால் நிச்சயம் நான் பலிகடாவாக்கப்படுவேன் என புலம்பியிருந்தார் தமிழிசை சவுந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.