காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தின் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய் இ முகம்மது தீவிரவாத முகாம்களை குறிவைத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை முதல் இந்திய எல்லைக் கோடு பகுதியில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.இந்தியத் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுற்றி வளைத்தது.அதிகாலை முதல் 6 மணி நேரத்திற்கும் மேல் இரு தரப்புக்கும் இடையே நீடித்த சண்டையில் தீவிரவாதிகள் இருவரை ராணுவம் சுட்டுக்கொன்றது. இந்திய வீரர்கள் தரப்பில் 5 பேர் காயமடைந்தனர். காஷ்மீரில் தீவிரவாதிகள் நாசகாரச் செயலில் ஈடுபடலாம் என்ற தகவலால் இந்திய ராணுவம் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.