பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி 'நமோ ஆப்' மூலம் நாடு முழுவதும் ஒரு கோடி பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சில் உரை நிகழ்த்தினார். இதற்காக நாடு முழுவதும் 15 ஆயிரம் மையங்களில் அந்தந்த மாநிலங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் திரண்டு பிரதமர் மோடியுடன், தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
எல்லையில் போர்ப் பதற்றம் சூழ்ந்துள்ள நேரத்தில் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடப்பார்ப்பதா? என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டிவிட்டரில் மோடியைக் கண்டித்து பதிவிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என 123 கோடி இந்தியர்கள் கவலையுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் மோடிக்கோ, மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே கவலைதான்.
காங்கிரஸ் கட்சியும் காரிய கமிட்டி கூட்டம், தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்து விட்ட நிலையில், நாட்டின் முதல் சேவகன் செய்யும் செயல் வெட்கக்கேடானது என்று பதிவிட்டுள்ளார்.
இதே போன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மே.வங்க முதல்வர் மம்தா, உ.பி.முன்னாள் முதல்வர் மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.