விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேராசிரியை நிர்மலாதேவி. இவருக்கு உதவியதாக இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேநேரம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஒருவருடகாலமாக அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை திருப்தி இல்லை என்பதால் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. மேலும் ஓராண்டாக பேராசிரியை நிர்மலாதேவியை சிறையில் வைத்திருப்பது ஏன்? அவர் என்ன தமிழக அரசின் சூப்பர் குற்றவாளியா எனவும் நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியிருந்தது. இந்தநிலையில் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஒரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிர்மலா தேவி சிறையில் பாலியல் உள்ளிட்ட தொல்லைகளை அனுபவித்து வருகிறார்.
இதனால் சிறையிலேயே தற்கொலை முயற்சியும் மேற்கொண்டுள்ளார். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை மறைத்து இவரை சிக்க வைத்துள்ளனர். கடந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நிர்மலாதேவியை வாகனத்தில் அழைத்துக் கொண்டு மதுரை சென்ற போது சிபிசிஐடி போலீஸார் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுபோல் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வருகிறார்" எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஆரம்பத்தில் இருந்து இந்த வழக்கில் மர்மம் விலகாத நிலையில் தற்போது அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.