அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. தென்காசி தொகுதியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறுவது சந்தேகமாகவே இருந்து வந்தது. இது குறித்து கிருஷ்ணசாமியும் பாஜக தலைவர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். பாஜக தலைவர்களின் சமாதான முயற்சியைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கூட்டணிப் பேச்சு நடத்தினார். முடிவில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி உடன்பாடு கையெடுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, வெற்றிக் கூட்டணியில் இணைந்தது மகிழ்ச்சி. எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் எங்கள் கட்சிக்கான சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.
பாஜக தரப்பில் தாமரை சின்னத்திலும், அதிமுக தரப்பில் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என கிருஷ்ணசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால், தனி சின்னத்தில் போட்டியிட கிருஷ்ணசாமி முடிவெடுத்ததாகவும், அநேகமாக தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.